தனுஷின் இயக்கத்தில் இரண்டாவது திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது ராயன். தனது முதல் திரைப்படம் ஆன பவர் பாண்டியில் சிறப்பு தோற்றத்தில் நடித்த தனுஷ், இந்த படத்தில் முழு நேர கதாநாயகனாகவே வருகிறார். அது மட்டுமல்ல இது தனுஷின் ஐம்பதாவது திரைப்படம் என்பது கூடுதல் சிறப்பு. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரித்து இருக்கிறது.
ஏ ஆர் ரகுமான் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இதிலிருந்து வெளியான உசுரே பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதிலும் ஏ ஆர் ரகுமான் குரலில் அந்தப் பாடல் வசீகரிப்பதாக பலரும் கருத்து தெரிவித்தனர். இது ஒரு பக்கம் இருக்க படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது.
ட்ரெய்லர் ஆரம்பித்தது முதல் இறுதிவரை ஆக்சன் காட்சிகள் மட்டுமே இடம்பெற்று இருந்தன. அதிலும் கடைசியில் பாட்ஷா படத்தின் ரெஃப்ரென்ஸை தனுஷ் வைத்திருந்தார். அந்தப் படத்தில் ரஜினி தான் உண்மையை சொன்னேன் என்று ஸ்டைலாக கூறி இருப்பார். இதில் தனுஷ் கெஞ்சி கேட்டேன் என்று கூறுவது போல ட்ரெய்லர் முடிவுக்கு வந்தது.
படத்தில் இடம்பெற்றிருக்கும் நட்சத்திரங்களும் அதன் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. குறிப்பாக தனுஷின் அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் இந்த படத்தில் நடித்திருக்கிறார். அவர்தான் ட்ரைலரில், ஒரு சிறிய கதையை கூறுவார். அதில் காட்டில் சிங்கமாகவே இருந்தாலும் ஓநாய் கூட்டத்தால் வஞ்சிக்கப்படும் போது என்ன ஆகும் என்பதை விளக்கி இருப்பார்.
இதில் ஓநாய் கூட்டமாக எஸ் ஜே சூர்யா பிரகாஷ்ராஜ் மற்றும் சரவணன் ஆகியோர் குழுவை தனுஷ் காட்டி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. தனுஷிற்கு தங்கையாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். இது போக சந்திப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஆகியோர் தனுஷின் சகோதரர்களாக வருகிறார்கள். அபர்ணா பாலமுரளிக்கும் படத்தில் இடம் உண்டு. அவர் சந்திப் கிசனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் படம் குறித்த பல்வேறு விஷயங்களை எஸ்.ஜே சூர்யா பகிர்ந்துள்ளார். படத்தில் துஷாரா விஜயனுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார். ஏன் டைட்டில் கூட முதலில் அவர் பெயர் தான் வரும் என்று கூறப்படுகிறது. ராயபுரத்தை கண்முன்னே கொண்டு வருவதற்காக 30 கோடியில் இந்த படத்திற்காக செட்டு போட்டு இருக்கிறார்களாம். அது மட்டுமல்ல ட்ரெய்லரில் நீங்கள் பார்த்தது அனைத்துமே செட்டு தான் என்றும், திரைப்படத்திற்காக ஒரே நாளில் டப்பிங் பேசி முடித்திருப்பதாகவும் எஸ் ஜே சூர்யா தெரிவித்துள்ளார். வரும் 26 ஆம் தேதி ராயன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.





