சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்ததால், சிறுத்தை சிவா உடன் ஏற்கனவே ஒப்பந்தமான சூர்யா அதில் நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால் இதெல்லாம் பொய்யாக்கும் வகையில், சிறுத்தை சிவா உடன் கைகோர்த்தார் சூர்யா.
கங்குவா என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, கொடைக்கானலில் அடர்ந்த வனப்பகுதிகளில் நடைபெற்றது. ஆந்திர மாநிலம், ராஜ முந்திரியில் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் இரண்டு வேடங்களில் சூர்யா நடித்துள்ளார்.
முந்தைய ஜென்மத்தை தொடர்பு படுத்தி எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில், சூர்யாவின் தோற்றம் புதுமையான வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கியாரா அத்வானி, நட்டி, ஜெகபதிபாபு, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன்ஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படத்தை தயாரிக்கிறது.
இதற்கான சூட்டிங் பணிகளை முடித்துள்ள சூர்யா, அடுத்ததாக சுதா கொங்கரா படத்தில் இணைந்துள்ளார். சூர்யாவின் 43-வது திரைப்படமாக உருவாகும் இதில், துல்கர் சல்மான் அவருக்கு சகோதரராக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபோக நஸ்ரியாவும் படத்தில் உள்ளாராம். வில்லனாக பாலிவுட் நட்சத்திரம் விஜய் வர்மா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
கங்குவாவை முடித்துவிட்டு சூர்யா வாடிவாசல் படத்தில்தான் நடிப்பார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் பிஸியாக இருப்பதால், சுதா கொங்கராவுடன் சூர்யா இணைந்திருக்கிறார். இந்த இரண்டு திரைப்படத்தின் பணிகளையும் முடித்த பிறகு வாடிவாசல் உருவாகும் என்று கூறப்படுகிறது. இதனிடையே இந்தி திரையுலகம் சூர்யா அறிமுகமாவதில் ஆர்வம் காட்டி வருவதாக ஒரு பேச்சு எழுந்தது.
அவர் பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ராவுடன் அவர் இணைய இருப்பதாகவும், கர்ணா படத்தில் அவர் நடிப்பதாகவும் தகவல் வெளிவந்தது. இந்த நிலையில், சூர்யா, இயக்குனர் ராகேஷ்சை சந்தித்த காட்சிகள் வெளியாகி உள்ளன. இதனால் கிட்டத்தட்ட கர்ணா உறுதியாக இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அடுத்தடுத்த படங்களில் சூர்யா பிசியாக இருப்பதால், இதற்கான படப்பிடிப்பு எப்போது ஆரம்பிக்கும் என்பதில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





