நடிகர் எஸ்ஜே சூர்யா இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துக்கொண்டு இருக்கிறார். கடந்த 1990களில் வாலி, குஷி படங்கள் மூலம் இயக்குநராக அறிமுகமானார். வாலி படம், அஜீத்குமாருக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. சிம்ரன் நடிப்பு இதில் பேசப்பட்டது. ஜோதிகாவும் இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். விவேக் காமெடி சூப்பராக இருந்தது.
அதேபோல், குஷி படம் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அவரது சினிமா பயணத்தில் அமைந்தது. ஜோதிகாவின் நடிப்பு, இந்த படத்தில் மிக பிரமாதமாக இருந்தது. விவேக் காமெடி இந்த படத்தில் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. இதில் மும்தாஜூக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது.
இதையடுத்து எஸ்ஜே சூர்யா அன்பே ஆருயிரே, நியூ படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தினார். அதில் மயிலிறகே, மயிலிறகே வருடுகிறாய் மெல்ல பாடல், அன்பே ஆருயிரே படத்தில் செம ஹிட் ஆனது. அதே போல் நியூ படத்தில் சிம்ரன், தேவயானி நடித்தனர். இதில் காலையில் நான் கண்விழித்தால் கை தொழும் தேவதை அம்மா பாடலும் டிரண்டிங் ஆனது.
இப்படி இருந்த எஸ்ஜே சூர்யா திடீரென காணாமல் போனார். மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி படம் மூலம் ரீ என்ட்ரி ஆனார். தொடர்ந்து இசை, மாநாடு, மார்க் ஆண்டனி என வெற்றிப்படங்களை தந்து இப்போது, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மூலம் பெரிய பாராட்டை பெற்று இருக்கிறார். ரஜினியே இப்போதைய நடிகவேள் (எம்ஆர் ராதா) எஸ்ஜே சூர்யா தான் என பாராட்டி இருக்கிறார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நடிகர் எஸ்ஜே சூர்யா கூறியதாவது, ஒரு தரமான படைப்புக்கு, மக்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துக்கு பெயரும், கலெக்சன் இரண்டுமே கிடைத்திருக்கிறது. ராகவா லாரன்ஸ் இப்படியும் எனக்கு நடிக்க தெரியும் என்று இந்த படத்தில் நிரூபித்திருக்கிறார்.
நான் நடிகனாகும் ஆசையில்தான் இயக்குநர் ஆனேன். நடிகன் ஆன பிறகு, ஏன் இயக்குவதை நிறுத்தி விட்டாய் என சிலர் கேட்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கும். என்னை பொருத்தவரை என்னுடைய பொண்டாட்டி ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்றால், இது எனக்கு தலை தீபாவளிதான் என நகைச்சுவையாக கூறி இருக்கிறார் எஸ்ஜே சூர்யா. 57 வயது கடந்துள்ள நடிகர் எஸ்ஜே சூர்யா, இன்னும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.





