நடிகர் சூர்யா நடித்த படம் கருப்பு. இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் நட்டி நடராஜ் யோகிபாபு மன்சூர் அலிகான் லப்பர் பந்து சுவாசிகா ஷிவதா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சூர்யா 2 வேடங்களில் நடித்திருக்கிறார்.
கருப்பு படத்துக்கு முதலில் இசையமைக்க இருந்தவர் ஏஆர் ரகுமான். ஆனால் சில காரணங்களால் அவர் இசையமைக்க முடியாத சூழலில் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் கருப்பு படத்தில் கமிட் செய்யப்பட்டார். இந்த படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜியே வில்லனாகவும் நடித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு தீபாவளிக்கே இந்த படம் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்ட நிலையில் 6 மாதங்கள் கழித்து வருகிற மே 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் கருப்பன் சாமியாகவும் வக்கீல் கேரக்டரிலும் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் சிங்கம் படத்துக்கு பிறகு சூர்யாவுக்கு பெரிய அளவில் கம்பேக் தரும் படமாக இது இருக்கும் என்கின்றனர்.
வருகிற 24 அல்லது 25ம் தேதி மதுரையில் கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடத்தப்பட ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. தமிழ்நாடு கேரளம் ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் கருப்பு பட பிரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள நாயகன் சூர்யா திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் 2 வாரங்களை ஒதுக்கியிருக்கிறார்.
இந்நிலையில் கருப்பு படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் நீக்கப்பட்டுள்ளதாக இப்போது லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. சாய் அபயங்கர் இசையில் நடிகர் சிலம்பரசன் பாடிய இந்த பாடல் வெளியாகி வைரலானது. ஆனால் பாடலை கேட்டவர்கள் பெரும்பாலும் கலாய்த்து தள்ளினர். பாடல் வரிகளே புரியவில்லை என்றும் கிண்டலடித்தனர்.
சிம்புவின் குரலை தொழில்நுட்ப ரீதியாக சாய் அபயங்கர் மாற்றிய நிலையில் இந்த பாடல் கடும் விமர்சனங்களை சந்தித்தது. மேலும் பாடலில் நடிகர் சூர்யா சிம்புவை காட்டாமல் பாடல் முழுக்க ஆர்ஜே பாலாஜியும் சாய் அபயங்கரும் டான்ஸ் ஆடி ரசிகர்களை வெறுப்பேற்றியிருந்தனர். இந்த சூழலில் இந்த பாடல் கருப்பு படத்தில் இடம்பெறாது என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை நிம்மதியடைய செய்துள்ளது.





