தெலுங்கில் உருவான புஷ்பா புஷ்பா 2 படங்கள் மூலம் தென்னிந்திய சினிமாவில் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கீதா கோவிந்தம் என்ற படத்தில் விஜய் தேவர கொண்டாவுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் சுல்தான் வாரிசு படங்களில் நடித்தார்.
ஆனால் இந்த படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆனால் புஷ்பா மற்றும் புஷ்பா 2 படங்களில் நாயகியாக நடித்ததன் மூலம் ராஷ்மிகா மந்தனாவுக்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது. மேலும் இந்தியில் அனிமல் என்ற படத்தில் நடிகர் ரன்பீர் கபூருடன் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்து பாலிவுட் ரசிகர்களை திணறடித்தார்.
தொடர்ந்து நேஷனல் கிரஷ் என்று ராஷ்மிகா மந்தனா ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். தென்னிந்திய திரை உலகில் படுபிஸியான ஒரு நடிகையாக இருந்து வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்தக்கட்டமாக புஜ்பா 3 படத்திலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் குபேரா படத்தில் அவர் நடித்திருந்தார். தெலுங்கில் அபார வெற்றி பெற்ற குபேரா தமிழில் போதிய வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா நடிப்பதில் மட்டுமின்றி தொழிலில் முதலீடு செய்ய முடிவு செய்திருக்கிறார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவரது தாயாருக்கு வீடியோ கால் மூலம் பேசியதை அவர் தனது ரசிகர்களுக்கு பகிர்ந்திருக்கிறார். அந்த பதிவில், இன்று நான் மிக முக்கியமான படப்பிடிப்புக்கு செல்கிறேன். நீங்கள் சொன்னது போல் தொழிலை நான் தொடங்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
அவருக்கு ராஷ்மிகாவின் தாயார் சுமன் மந்தனா வாழ்த்து தெரிவித்துள்ளார். தொழில் தொடங்க போகிறேன் என்று கூறியுள்ள ராஷ்மிகா மந்தனா எந்த தொழிலில் முதலீடு செய்ய போகிறார் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை. திரை உலகில் முன்னணி பிரபலங்கள் பல ரியல் எஸ்டேட் ஹோட்டல்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா அழகு சாதன பொருட்கள் வர்த்தகத்தில் மார்க்கெட்டிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் நடிகை ராஷ்மிகா மந்தனாரும் அழகு சாதன பொருட்கள் காஸ்மெட்டிக் விற்பனையில் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூரி ஆர்யா ரவிமோகன் ஜீவா போன்றவர்கள் ஓட்டல்களை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் நயன்தாரா போலவே காஸ்மெட்டிக் பொருட்கள் மார்க்கெட்டிங்கில் ராஷ்மிகா மந்தனா ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.





