இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்தவர் சுதா கொங்கரா. இவர் துரோகி எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். விஷ்ணு விஷால் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்திருந்த இந்த திரைப்படம், வெளியானது குறித்து இங்கு பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
மோசமான விமர்சனத்தின் காரணமாக, இந்த திரைப்படம் வந்த இடம் தெரியாமல் மறைந்து போனது. இருப்பினும் தனது முயற்சியை கைவிடாத சுதா கொங்கரா, மாதவனை வைத்து இறுதிச்சுற்று திரைப்படத்தை எடுத்திருந்தார். குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ரித்திகா சிங்.
அவர் இயல்பிலேயே குத்துச்சண்டை வீராங்கனை என்பதால், இந்த திரைப்படத்திற்கு கச்சிதமாக ரித்திகா பொறுந்தியிருந்தார். விறுவிறுப்பான திரைக்கதை, உணர்வுபூர்வமான காட்சிகள், மாதவன், ரித்திகா, ராதாரவி, நாசர், காளி வெங்கட் ஆகியோரின் அற்புதமான நடிப்பு ஆகியவற்றால் இறுதிச்சுற்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதனைத் தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்து சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்கினார் சுதா கொங்கரா. உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. தொடர்ந்து பல ஆண்டுகளாக பெரிய வெற்றியை கொடுக்க முடியாமல் திண்டாடி வந்த சூர்யாவுக்கு ஒரு திருப்புமுனையை இந்த திரைப்படம் கொடுத்தது.
மாறனாக படம் முழுவதும் வாழ்ந்திருந்த சூர்யா, தேசிய விருதையும் பெற்றார். இதேபோல் சூரரைப் போற்று திரைப்படமும் சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றது. திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகாமல் இருந்ததே ரசிகர்களின் குறையாக இருந்தது. படத்தில் நடித்த அனைவரும் தங்கள் பங்களிப்பை 100% கொடுத்ததே இதன் வெற்றி என்று சினிமா விமர்சகர்கள் தெரிவித்தனர்.
இப்படியான சூழலில் சூரரைப் போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கை சுதா கொங்கரா எடுத்துள்ளார். இதில் கதாநாயகனாக அக்ஷய் குமார் நடித்திருக்கிறார். சூர்யாவின் 2d என்டர்டைமென்ட் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சிறப்பு தோற்றத்திலும் சூர்யா இதில் நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்கு ஸர்ஃபிரா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





