நடிகர் ரஜினிகாந்த் 50 ஆண்டுகளை தமிழ் சினிமாவில் கடந்திருக்கிறார். இதில் அவர் நடித்த பல படங்கள் மிகப்பெரிய சூப்பர் ஹிட் படங்களாக இருந்திருக்கின்றன. சில படங்கள் மிக மோசமான தோல்வி படங்களாகவும் இருந்திருக்கின்றன. எனினும் தொடர்ந்து அவர் அதிகமாக வெற்றிப் படங்களை ரசிகர்களுக்கு தந்திருக்கிறார்.
அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் ரஜினிகாந்த் நடித்த படங்களில் தர்பார் அண்ணாத்த காலா வேட்டையன் குறிப்பாக கூலி போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வரவேற்பை பெறாமல் தோல்வியை சந்தித்தது. இதில் சில படங்கள் வணிக ரீதியான லாபம் என்றாலும் விமர்சன ரீதியாக ரசிகர்களை ஏமாற்றிய படங்களாக இருந்தன.
கடந்த ஆண்டில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் கூலி படம் வெளியானது. இது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்தது. கைதி விக்ரம் போல கூலி படம் மாஸ் ஆக இருக்கும் என்று ஆர்வம் காட்டிய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தான் லோகேஷ் கனகராஜ் தந்திருந்தார்.
கன்னட நடிகர் உபேந்திரா இந்தி நடிகர் அமீர்கான் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா போன்றவர்கள் இருந்தும் படம் ஜொலிக்கவில்லை. மலையாள நடிகர் சௌபிர் சாஹிர் மட்டுமே தனது சிறப்பான வில்லன் நடிப்பை பதிவு செய்திருந்தார். ரஜினி மற்றும் சத்யராஜின் கேரக்டர்கள் பார்த்து ரசிகர்கள் அப்செட் ஆகி விட்டனர்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா கூலி படம் குறித்த தனது விமர்சனத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார். இதுகுறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியதாவது, எனக்கு கூலி படத்தில் கடைசி 10 நிமிடங்கள் பிடித்திருந்தது. அதில் அப்பாவை இளமையான லுக்கில் டீ ஏஜிங் செய்து காட்டியிருப்பார்கள்.
ஆனால் தலைவர் ரஜினிகாந்த் ரசிகையாக அவரிடம் இருந்து இன்னும் நான் எதிர்பார்க்கிறேன். கூலி எனக்கு பிடித்த படம்தான். ஆனால் எனக்கு மிகவும் பிடித்த டாப் பேவரைட் படமாக அது இருக்காது. இப்போதெல்லாம் மக்கள் வன்முறையை அதிகமாக ரசிப்பதில்லை என்பது என் கருத்து என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இதன்மூலம் கூலி ரசிகர்கள் விரும்பும் படம் அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.





