இந்த ஆண்டு வெளியாகும் திரைப்படங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் இந்தியன் 2. இதற்கு முக்கிய காரணம் இதன் முதல் பாகம் ரசிகர்களிடையே ஏற்படுத்திய தாக்கம் தான். 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூல் மழை குவித்தது.
அதில் சேனாதிபதி தாத்தாவாக கலக்கிய கமலஹாசன், அதற்காக தேசிய விருதையும் பெற்றார். லஞ்சத்திற்கு எதிராக கத்தியை தூக்கும் அவர், இறுதியில் தன் மகனையும் மன்னிக்காமல் கொலை செய்யும் இறுதி காட்சி ரசிகர்களை நடுங்க வைத்தது. இப்படியான சூழலில் அதன் இரண்டாம் பாகம் வரும் ஜூலை பன்னிரெண்டாம் தேதி வெளியாகிறது.
கிட்டத்தட்ட இதற்கான படப்பிடிப்பை ஐந்து ஆண்டுகளாக நடத்தியிருக்கிறார் சங்கர். தயாரிப்பு நிறுவனத்துடன் மோதல், கமல்ஹாசன் உடன் மனஸ்தாபம், படப்பிடிப்பின் போது விபத்து என பல்வேறு சிக்கல்களைத் தாண்டி இந்தியன் 2 திரைப்படம் உருவாகி இருக்கிறது. முதல் பாகத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கு அனிருத் வேலை செய்திருக்கிறார்.
இதன் டீசர் வெளியாகி இருந்தபோது அனிருத் இசை நன்றாக இல்லை என்று பலரும் கமெண்ட் செய்து வந்தனர். ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியன் 2 திரைப்படத்திலிருந்து வெளியான பாரா பாடலுக்கு கெத்தாக இசையமைத்து பாராட்டைப் பெற்றார் அனிருத். பா விஜயின் வரிகளும் அதற்கு ஏற்றார் போல் இருக்க, பாடலும் ஹிட்டானது.
இதில் சித்தார்த்திற்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்திருக்கிறார். இதுபோக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, எஸ்ஜே சூர்யா, மறைந்த நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா உள்பட பலர் நடித்திருக்கின்றனர். இதில் சித்தார்த், சேனாதிபதி தாத்தாவின் பேரனாக நடித்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது அது இல்லை என்பது முடிவாகி இருக்கிறது.
அதாவது youtube-ல் சேனல் நடத்தி வரும் சித்தார்த், தவறுகளை சுட்டிக்காட்டி அதை வீடியோவாக வெளியிடுவாராம். இதனால் அவருக்கு எதிரிகள் அதிகரிக்க, சித்தாத்திற்கு ஆதரவாக சேனாதிபதி தாத்தா களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. இதே போல் சேனாதிபதியின் இளமை காலத்தை மையமாக வைத்தே இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் எடுக்கப்பட்ட இருப்பதாகவும் பேசப்படுகிறது.





