தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் முரளி ராமசாமி, கதிரேசன் ஆகியோரிடம் சில ஆண்டுகளுக்கு முன், அவர்கள் தயாரிக்கும் படங்களில் நடிப்பதாக அட்வான்ஸ் வாங்கிய நடிகர் தனுஷ், அந்த படங்களில் நடிக்க கால்ஷீட் தரவில்லை. இந்த விவகாரத்தில் நடிகர் தனுஷ் மீது தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு கொண்டு வர வேண்டும் என்று பிரச்சனை ஏற்பட்டது. தயாரிப்பாளர் சங்கத்துடன் நடிகர் சங்க முக்கிய நிர்வாகிகள் பேசி, சமீபத்தில்தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது.
இப்போது தேனி மாவட்டத்தில் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த சூழலில் தனுஷ் விவகாரத்தில் தற்போது பெப்சி அமைப்பு தலையிட்டு தனுஷ் பிரச்சனை குறித்து விசாரிக்க தனி குழுவை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த செயல் பெப்சியின் அதிகார வரம்பை மீறியது. தன்னை சக்தி வாய்ந்த அமைப்பாக காட்டிக் கொள்ள வேண்டாம் என்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் இடையே நடந்த பலகட்ட பேச்சு வார்த்தைகளில் தமிழ் திரையுலக தொழிலாளர் நலனை கருத்தில் கொண்டு ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் 37 பரிந்துரைகளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் வழங்கியது.
நடிகர் சங்க உறுப்பினர் தனுஷ் விஷயத்தில் நடிகர் சங்கம் முன்னெடுத்த முயற்சியால் தீர்வு ஏற்பட்டு, தற்போது தனுஷ் ஷூட்டிங் நடந்து வருகிறது. இதற்கிடையே தனுஷ் குறித்து எந்த விவாதமும் இல்லாத நிலையில், தனுஷ் குறித்து விசாரிக்க ஒரு கூட்டுக்குழு அமைக்க வலியுறுத்தி உள்ளதாக பெப்சி நிர்வாகம் தகவல் வெளியாகி உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
தயாரிப்பாளர்கள், நடிகர் சங்கம் இடையே சிக்கல் ஏற்பட்டால் அதை பேசி தீர்க்க இரண்டு சங்கங்களும் தயாராக உள்ள நிலையில், தேவையின்றி தலையிட்டு இல்லாத ஒரு கருத்தை கூறுவது கண்டனத்திற்குரியது. திரைத்துறை சிக்கல்கள் அனைத்துக்கும் தீர்வு காண்பது போன்ற ஒரு மாயத் தோற்றம் ஏற்படுத்த முயலும் பெப்சியின் இந்த செயல் மிகவும் தவறானது.
நடிகர்கள், தயாரிப்பாளர் இடையே சிக்கல் இருந்தால் அதை பேசி தீர்வு காண அனுபவமும் ஆற்றலும் உள்ள நிர்வாகிகள் இரு அமைப்பிலும் உள்ளனர். பெப்சி நிர்வாகம் தங்களது அதிகாரம் மையமாக சித்தரித்துக் கொண்டு பிற சங்கங்களின் அலுவலகல்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். திரை துறையில் பலகாலமாக நிலவும் பொது அமைதியும் நல்லிணக்கத்தையும் தொலைக்க முயற்சிக்கும் பெப்சி நிர்வாகத்தின் இந்த வரம்பு மீறிய செயல்பாடுகளை திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கண்டிக்க வேண்டும் என தென்னிந்திய சங்கம் வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





