நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீரபாண்டிய கட்டபொம்மன் பாசமலர் பாகப்பிரிவினை வசந்த மாளிகை தங்கப்பதக்கம் என ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தாலும் அவர் நடித்த படங்களில் முதல் மரியாதை படத்துக்கு எப்போதுமே சிறப்பிடம் உண்டு. இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த முதல் மரியாதை திரைப்படம் தமிழ் சினிமாவின் அடையாளம் என்றால் அது மிகையல்ல.
இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் சிவாஜி கணேசன் நடிக்க மறுத்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அன்னக்கிளி செல்வராஜ் எழுதிய கதைதான் அந்திமந்தாரை. பென்சனுக்காக போராடும் ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியின் கதை. திருமணம் செய்து கொள்ளாத கந்தசாமி என்கிற அந்த தியாகி அண்ணன் மகன் வீட்டில் வசிப்பார்.
வருமானத்துக்கு வழியில்லாத அவர் அந்த குடும்பத்திற்கு ஒரு சுமையாக இருப்பார். அதனால் பென்ஷன் வாங்க கூடாது என்ற உறுதியோடு இருக்கும் அந்த தியாகி தனது உறுதியை மாற்றிக் கொண்டு பென்சனுக்காக மனு அளிப்பார். ஆனால் பென்ஷன் வராது. அந்த நேரத்தில் ஜனாதிபதி சென்னைக்கு வருவார். சுதந்திரப் போராட்டத்தின் போது ஜனாதிபதியும் கந்தசாமியும் ஒரே சிறையில் தண்டனை அனுபவித்தவர்கள்.
அதனால் ஜனாதிபதியை சந்தித்து தியாகி பென்சனுக்கு உதவி கேட்கலாம் என்று அவரை சந்திக்க செல்வார். ஜனாதிபதியும் அவரை வரவேற்று உபசரிப்பார். அப்போது நிறைய பேர் சுதந்திரத்திற்காக போராடினோம் என்று பென்ஷன் கேட்கிறார்கள். ஆனால் அந்த லிஸ்ட்டில் உன் பேர் இல்லை. தியாகத்திற்காக நீ பணத்தை எதிர்பார்த்திருக்க மாட்டாய் என்பது எனக்கு தெரியும். உன்னை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது என்று சொல்வார்.
அதனால் பென்ஷன் உதவியை கேட்காமலேயே தியாகி திரும்பி வந்து விடுவார். மீண்டும் குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்ட அவர் சுதந்திரப் போராட்டத்தின் போது காதலித்த தனது காதலியை தேடி செல்வார். கடைசியில் சாலை ஓரத்தில் உள்ள குப்பை மேட்டில் அந்த தியாகி இறந்து கிடப்பதோடு படம் முடிவடையும். இந்த தியாகி கேரக்டரில் சிவாஜி கணேசன் நடிக்க வேண்டும் என்று அவரை சந்தித்து பாரதிராஜா கதை சொன்னார்.
கதையை கேட்கும் போதே பலமுறை அழுத சிவாஜி, ஏம்பா என்னை இப்படி அழ வைக்கிறே? நான் நடிச்சா ஆடியன்ஸ் எல்லாரும் படம் முழுக்க அழுதுகிட்டே இருப்பாங்க. வேண்டாம்பா. என்னை விட்டுவிடு என்று சொல்லி படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். பிறகு அந்த கேரக்டரில் நடிகர் விஜயகுமார் நடித்தார். படம் பல விருதுகளை பெற்ற போதிலும் இந்த படம் வணிக ரீதியாக தோல்வி அடைந்தது. எனினும் சிறந்த படைப்புகளில் ஒன்றாகவும் இருந்தது.





