தமிழ் சினிமாவில் பாடும் நிலா பாலு என்று கொண்டாடப்பட்டவர் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய பிரபலமான பாடகராக இசைத்துறையில் வலம் வந்தவர். தன்னிகரற்ற ஒரு சிறந்த பாடகராக இன்றும் கொண்டாடப்படுபவர்.
பாடகராக மட்டுமின்றி பல படங்களில் எஸ்பி பாலசுப்ரமணியம் நடித்தும் இருக்கிறார். இவர் கேளடி கண்மணி படத்தில் மண்ணில் இந்த காதலின்றி என்ற பாடலை மூச்சு விடாமல் பாடி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றவர். பாடகர் நடிகர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் டப்பிங் கலைஞர் என எஸ்பிபிக்கு பல முகங்கள் இருந்தன.
எம்ஜிஆர் சிவாஜி கணேசன் துவங்கி ரஜினி கமல்ஹாசன் படங்களுக்கு பாடி பிறகு அஜீத்குமார் சூர்யா தனுஷ் என பாடிய பெருமைக்கு சொந்தக்காரர் எஸ்பி பாலசுப்ரமணியம். சில ஆண்டுகளுக்கு முன் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, குணமடைந்த நிலையில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு எஸ்பிபி மறைந்தார். அவர் மறைந்தாலும் அவர் பாடிய பாடல்களில் இன்னும் வாழ்ந்து வருகிறார்.
பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்துக்கு சரண் என்ற மகனும் பல்லவி என்ற மகளும் உள்ளனர். இதில் எஸ்பிபி சரண் ஏற்கனவே பல படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்திருக்கிறார். சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். ஆனால் பெரிய அளவில் நடிப்பு அவருக்கு கை கொடுக்கவில்லை.
ஆனால் பல பாடல்களை பாடியவராகவும் எஸ்பிபி சரண் இருக்கிறார். நடிகராக பாடகராக மட்டுமின்றி சில படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார். சென்னை 28 மழை ஆரண்யாகாண்டம் ஆகிய படங்களின் தயாரிப்பாளர் எஸ்பிபி சரண்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது எஸ்பிபி சரண் டைரக்டராக மாறியிருக்கிறார்.
அதிகாரம் என்ற டைட்டில் வைக்கப்பட்ட அரசியல் கதைக்களத்தை மையமாக கொண்ட புதிய வெப் தொடர் ஒன்றை எஸ்பிபி சரண் இயக்கி உள்ளார். அதுல்யா ரவி அபிராமி தேவ் அரவிந்த் ஆகாஷ் ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்த இந்த வெப் தொடர் இப்போது படப்பிடிப்பில் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. வெப் தொடரை முதன் முதலாக இயக்கி உள்ள எஸ்பிபி சரண், மிக விரைவில் திரைப்பட இயக்குனராகவும் களத்தில் இறங்குவார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.





