ரஜினி ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே சூப்பர் ஸ்டார் சர்ச்சை போய்க்கொண்டு இருக்கும் நிலையில் பல சினிமா பத்திரிக்கையாளர்களும் யூட்யூப் பிரபலங்களும் இந்த விவகாரம் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்களுக்கும் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் இடையே ஒரு போர்க்களமே நடந்துகொண்டிருக்கிறது.

இதனிடையே பிரபல தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில், “ஒரே சூப்பர் ஸ்டார் என்ற சகாப்தம் பிசினஸில் முடிந்துவிட்டது. ஒவ்வொரு நடிகருக்கும் அவரவர்களின் திரைப்படங்களுக்கு ஏற்றார் போல் மார்க்கெட் இருக்கிறது. தெலுங்கு சினிமாத் துறையைப் போல நாம் நமது தமிழ் சினிமாவின் மொத்த மார்க்கெட்டையும் எல்லைகளுக்கு அப்பால் கொண்டு செல்லவேண்டும். இதனை நடிகர்களும் ரசிகர்களும் புரிந்துகொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய பிரபல மூத்த சினிமா பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, எஸ்.ஆர்.பிரபு டிவிட்டின் பின்னணி குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

“கைதி 2 திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தனது பேன்னரில் இயக்குவார் என்று எஸ்.ஆர்.பிரபு வெகு காலமாக காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் திடீரென ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ்ஜை வளைத்துப்போட்டுக்கொண்டார். இதனால் எஸ்.ஆர்.பிரபு செம கடுப்பில் இருக்கிறார் என கூறுகின்றனர். லோகேஷ் கனகராஜை பகைத்துக்கொள்ள முடியாது என்பதற்காக ரஜினிகாந்திடமே தனது வீரத்தை காட்டியுள்ளார் எஸ்.ஆர்.பிரபு” என்று அப்பேட்டியில் செய்யாறு பாலு கூறியுள்ளார்.

“கைதி” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து “கைதி 2” திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தனது பேனரில் இயக்குவார் என்று பல வருடங்களாக எஸ்.ஆர்.பிரபு காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் லோகேஷ் கனகராஜோ “மாஸ்டர்”, “விக்ரம்”, “லியோ” என்று போய்விட்டார். “லியோ” படத்திற்கு பிறகாவது லோகேஷ் கனகராஜ் “கைதி 2” படத்தை இயக்குவார் என்று பார்த்தால் ரஜினிகாந்த் புராஜெக்ட்டுக்கு போய்விட்டார். எனினும் ரஜினிகாந்த் படத்திற்கு பிறகு “கைதி 2” படத்தை லோகேஷ் கனகராஜ் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





