சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நேற்று திமுக முப்பெரும் விழா நடந்தது. இந்த விழாவில் முன்னாள் தமிழக முதல்வர் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசியதாவது, விஜய் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டதாக சொன்னாலும் மக்கள் முன்னிலையில் இன்னமும் முதல்வராக நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
ஆனால் இயக்குனர் யார் கேமராமேன் யார் என்று தெரியாமலேயே மக்களின் முன்பு அவரது நடிப்பு தொடர்கிறது. முன்பு சினிமாவில் பஞ்ச் டயலாக் பேசினார்கள். இப்போது வெளிநாட்டு லொகேஷனில் சூட்டிங் நடத்துகிறார்கள். எல்லாமே ரீல்ஸ்தான். தமிழக வெற்றிக் கழகம் என்பதற்கு பதிலாக தமிழக ரீல்ஸ் கழகம் என்று அந்த கட்சிக்கு பெயர் வைத்திருக்கலாம்.
தவெக ஆட்சியில் நான்கே மாதங்களில் தமிழகத்தின் வளர்ச்சி முற்றிலும் முடங்கிப் போய்விட்டது. தமிழகம் 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது. பரந்தூர் விமான நிலையத் திட்டம் போன்ற முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை கைவிட்டதன் மூலம் மாநிலத்தின் பொருளாதார கனவுகள் சிதைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் இரண்டே இரண்டுக்கு மத்தியில் தான் போட்டி. ஒன்று மின்வெட்டு இன்னொன்று அரிவாள் வெட்டு.
கொலை கொள்ளை போன்ற குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ள போதிலும் முதலமைச்சர் விஜய்க்கு சட்டம் ஒழுங்கு பற்றி சிறிதும் கவலை இல்லை. திமுக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் எழுப்பிய நிர்வாக குறைபாடுகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் தவெக அரசு மிசா மற்றும் சர்க்காரியா கமிஷன் போன்ற தேவையற்ற பல விவகாரங்களை எடுத்து அவதூறு பரப்புகிறது.
நான் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எனது தியாகத்தை மதிப்பிட இங்கு யாருக்கும் தகுதி இல்லை. இதற்கான ஆதாரங்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டிபாபுவின் சிறை டைரியிலும் எம்ஜிஆர் அமைத்த இஸ்மாயில் கமிஷன் அறிக்கையிலும் தெளிவாக உள்ளது. புது பொம்மையை பார்த்து குழந்தைகள் உற்சாகம் அடைவது போல இப்பொழுது உள்ள தவெக அரசு மீது மக்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.
இந்த தற்காலிக சினிமா மோகம் விரைவில் மறைந்து மீண்டும் திமுகவையே மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். என்னவோ தவெக ஆட்சிதான் வேண்டும் என்று மக்கள் காத்திருந்து ஓட்டுப் போட்டது போன்ற பில்டப்பை செய்து ஏமாற்றுகிறார்கள். வெறும் 27 ஓட்டுகள் தான் இந்த வெற்றிக்கு உள்ள வித்யாசம். இது உண்மையான அரசியல் அலை அல்ல, வெறும் சினிமா சுனாமி என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.





