மலையாளத்தில் பல படங்களில் நடித்த பிரபல நடிகை அவர். தமிழில் தீபாவளி வெயில் கூடல் நகர் ஆரியா ஜெயம் கொண்டான் சித்திரம் பேசுதடி அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2017ம் ஆண்டில் கேரவனில் சென்ற அவரை ஒரு கும்பல் வழிமறித்து காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தது. இதுகுறித்த வழக்கில் போலீசார் மலையாள நடிகர் திலீப்குமார் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், சில தினங்களுக்கு பின் இந்த வழக்கில் இருந்து நடிகர் திலீப் உள்ளிட்ட 3 பேர் விடுவிக்கப்பட்டனர். மற்ற 6 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்த நடிகை ஒரு நீண்ட பதிவை தனது வலைதள பக்கத்தில் செய்திருக்கிறார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, 8 ஆண்டுகள் 9 மாதங்கள் 23 நாட்கள் கழித்து இந்த நீண்ட வலி மிகுந்த பயணத்தில் நான் இறுதியாக சிறிய வெளிச்சத்தை காண்கிறேன். 6 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டதில் நன்றி கொண்டிருக்கிறேன். என்னுடைய வேதனையை பொய் என்றும் இந்த வழக்கை கற்பனை கதை என்றும் சொன்னவர்களுக்கு இந்த தருணத்தை சமர்ப்பிக்கிறேன். இன்று நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
குற்றவாளி எண் 1 என் தனிப்பட்ட ஓட்டுனர் என சிலர் கூறுகின்றனர். இது முற்றிலும் பொய். அவர் என் ஓட்டுநரோ, என் ஊழியரோ, எனக்கு அறிமுகமானவரோ இல்லை. 2016ம் ஆண்டில் நான் பணியாற்றிய ஒரு படத்திற்கு ஓட்டுனராக நியமிக்கப்பட்ட முன்பின் அறியாத நபர் அவர். அப்போது ஓரிருமுறை மட்டுமே அவரைப் பார்த்தேன். அதனபின் அந்த குற்றம் நடந்த நாள் வரை மீண்டும் அவரை சந்தித்ததே இல்லை. தயவுசெய்து தவறான கதைகளை பரப்புவதை நிறுத்துங்கள்.
இந்த தீர்ப்பு பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் எனக்கு இல்லை. 2020ல் இருந்தே ஏதோ சரியில்லை என்ற உணர்வு எனக்குள் உருவாகத் தொடங்கியது. குறிப்பாக ஒரு குற்றவாளியை பொருத்தவரை வழக்கு கையாளப்பட்ட விதத்தில் ஏற்பட்ட மாற்றங்களை அரசு தரப்பினரும் கவனித்தனர். இடைப்பட்ட அந்த காலங்களில் நான் உயர்நீதிமன்றத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் நாடி இந்த நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்பதை சொன்னேன். இந்த வழக்கை அதே நீதிபதியிடம் இருந்து மாற்ற வேண்டும் என்கிற ஒவ்வொரு கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டன.
பல ஆண்டுகளின் வலி கண்ணீர் உணர்வு போராட்டத்தைக் கண்டு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். இந்த நாட்டில் சட்டத்திற்கு முன் அனைத்து குடிமக்களும் சமமாக நடத்தப்படுவதில்லை. இந்த பயணத்தில் என்னுடன் துணை நின்றவர்கள் அனைவருக்கும் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பணத்தைப் பெற்றுக் கொண்டு என் மேல் அவதூறுகளை பொழிந்து கதை கட்டியவர்கள் மேலும் பணத்தை வாங்கிக் கொண்டு அதை தொடர்ந்து செய்யலாம் என்று அந்த நடிகை ஆதங்கமாக கூறியிருக்கிறார்.





