நடிகர் அஜித் தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது விடாமுயற்சி திரைப்படத்தின் சூட்டிங் ஏற்கெனவே முடிவடைந்து விட்டது. இந்த திரைப்படத்தின் தொடக்கத்திலிருந்தே சிக்கல் நீடித்து வந்தது. முதலில் இதனை லைகா நிறுவனம் சார்பில் விக்னேஷ் சிவன்தான் இயக்குவதாக இருந்தது. இதற்கான அறிவிப்பையும் இயக்குநரே வெளியிட்டார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் படத்திலிருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டுவிட்டது.
இதற்கு தயாரிப்பு நிறுவனத்திற்கும், இயக்குநருக்கும் இடையே ஏற்பட்ட முரண்தான் காரணம் என்று கூறப்பட்டது. பிறகு, அஜித் படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என அறிவித்தது லைகா தயாரிப்பு நிறுவனம். படத்தின் பெயர் விடாமுயற்சி என்றும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான போஸ்டர் கடந்த ஆண்டு மே 1ம் தேதி, அதாவது அஜித் பிறந்தநாளில் வந்தது.
ஆனால் அதன்பிறகு சூட்டிங் செல்வதற்கே பல மாதங்கள் ஆகின. இதற்கு அஜித் மட்டுமே காரணம் என்றும், பைக் டூரில் அவர் கவனம் செலுத்தி வருவதால் படப்பிடிப்புக்கு அவர் வருவதில்லை என்றும் பலர் கூறி வந்தனர். இப்படியான சூழலில் கடந்தாண்டு டிசம்பரில் இதன் சூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது.
அதில் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிப்பது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் உறுதியானது. இதற்கு அனிருத் இசையமைப்பதும், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா கூறி தெரியவந்தது. இதன் சூட்டிங் நன்றாக சென்று கொண்டிருந்தபோதே, மறுபக்கம் குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித் கமிட்டானார். தற்போது இந்த படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஆனால் அஜர்பைஜான் நாட்டில் சூட்டிங்கை முடித்தபிறகு விடாமுயற்சி படத்தின் வேலைகள் மந்தமாக தொடங்கின. அண்மையில்தான் இதன் டப்பிங் வேலைகள் தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு, எப்படியும் விடாமுயற்சி இந்தாண்டில் ரிலீசாகாது என்பதை உணர்த்துவதாக பலர் கூறினர். இந்நிலையில், விடாமுயற்சிக்கான காலதாமதம் குறித்து சண்டை பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தர் மனம் திறந்துள்ளார்.
அதில், படப்பிடிப்புக்கான தாமதம் குறித்து பலர் பல்வேறு விமர்சனங்களை கூறுகிறார்கள். ஆனால், இந்த லேட்டுக்கு காரணம், படப்பிடிப்பு இடங்கள் மட்டுமே. விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி செதுக்கி கொண்டிருக்கிறார். இதில் வேறு ஒரு அஜித்தை நீங்கள் பார்ப்பீர்கள். இதேபோல், குட் பேட் அக்லி படமும் நன்றாக வந்து கொண்டிருக்கிறது. பில்லா படத்திற்கு பிறகு முற்றிலும் மாறுபட்ட அஜித்தை நீங்கள் இதில் பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.





