தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கார்த்தி. பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கார்த்தி, பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக பையா, கடைக்குட்டி சிங்கம், கொம்பன், நான் மகான் அல்ல, தோழா, கைதி, சர்தார் போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெற்றன.
ஆனால் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜப்பான் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதைத்தொடர்ந்து அவரது நடிப்பில் மெய்யழகன் படம் கடந்த மாதம் 27ம் தேதி வெளியானது. இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் அரவிந்த்சாமி நடித்திருந்தார். ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினி உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை, ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் 96. இந்த படத்தின் இயக்குனர் பிரேம்குமார், மெய்யழகன் படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இந்த வெற்றிக் கூட்டணி இணைய இருப்பதாக தகவல் சமீபத்தில் வெளியானது.
மெய்யழகன் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி, சர்தார் 2 படப்பிடிப்பில் இப்போது பிஸியாக இருந்து வருகிறார். சர்தார் 2 படப்பிடிப்பு சென்னையில் வேகமாக நடந்து வருகிறது. இதையடுத்து அவர் கைதி 2 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி மெய்யழகன் படம் வெளியானது. இந்த படம் திரைக்கு வந்தபோது படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாகவும், இதனால் சில காட்சிகள் படத்தின் வேகத்தை குறைப்பதாகவும் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்தது. இதையடுத்து 18 நிமிட காட்சிகள் மெய்யழகன் படத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில் வருகிற 25ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மெய்யழகன் படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது 2 தினங்கள் கழித்து வருகிற 27ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் மெய்யழகன் படம் வெளியாக இருப்பதாக நெட்ப்ளிஸ் தரப்பில் அறிவித்திருக்கிறது. தீபாவளியை கவனத்தில் கொண்டு இந்த ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.





