நடிகர் விஜய் இப்போது தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, கடந்த மாதம் 5ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. கேரள மாநிலம் பையனூரில் விஜய் பாடிய பாடல் காட்சியை எடுத்து முடித்த இயக்குனர் எச் வினோத் இப்போது சென்னையில் அடுத்தகட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்.
தளபதி 69 என தற்காலிக பெயர் வைத்த இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், நரேன். கௌதம் மேனன், பாபி தியோல் நடிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ள விஜய், சமீபத்தில் தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை மிக பிரமாண்டமாக விக்கிரவாண்டியில் நடத்திக் காட்டினார். இந்த மாநாட்டில் 48 நிமிடங்கள் அவர் பேசிய அரசியல் பேச்சு, இணையத்திலும் மக்கள் மத்தியிலும் பெரிய அளவில் வைரலானது.
குறிப்பாக தன்னுடைய அரசியல் எதிரி திமுகதான் என்று இந்த மாநாட்டில் பகிரங்கப்படுத்திய நடிகர் விஜய், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு பெரும்பாலான தொகுதிகளில் அதிகபட்ச ஓட்டுகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம் என்றும் சவால் விட்டுள்ளார்.
இந்த நிலையில், தற்போது நடித்துவரும் தளபதி 69 படத்துடன் தனது சினிமா பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும் விஜய், அடுத்தகட்டமாக அரசியலில் தனது முழு கவனத்தை செலுத்த உள்ளார். அதனால் வருகிற மார்ச் மாத இறுதிக்குள் ஷூட்டிங்கை முடித்துவிடவும் வருகிற அக்டோபரில் படத்தை வெளியிடவும் அவர் ஏற்கனவே டைரக்டர் எச் வினோத்திடம் அறிவுறுத்தி இருந்தார்.
ஆனால் தற்போது ரிஷப் ஷெட்டி இயக்கி நடிக்கும் காந்தாரா சாப்டர் 1 என்ற படம் வருகிற அக்டோபர் 2ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது காந்தாரா படத்தின் அடுத்த படமாக இருப்பதால், பான் இந்தியா படமாக ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது. அதனால் தளபதி 69 படத்தை அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியிடலாம் என நடிகர் விஜய் முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது தளபதி ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.





