மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். தமிழிலும் மொழி அபியும் நானும் கனா கண்டேன் கண்ணாமூச்சி ஏனடா ராவணன் சத்தம் போடாதே நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இப்போது நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் அவர் மலையாள சினிமாவில் வலம் வருகிறார்.
நடிகர் பிருத்விராஜ் மலையாளத்தில் லூசிபர் என்ற படத்தின் மூலம் இயக்குனரானார். நடிகர் மோகன்லால் நாயகனாக நடித்து கடந்த 2019ம் ஆண்டில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து இப்போது லூசிபர் படத்தின் 2ம் பாகமாக எல்2 எம்புரான் என்ற படத்தை இயக்கி நடித்து உள்ளார். இதில் மோகன்லாலுடன் பிருத்விராஜூம் இணைந்து நடித்திருக்கிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன் வெளியான எல்2 எம்புரான் படத்தில் 2002ம் ஆண்டில் நடந்த குஜராத் கலவரத்தை மையப்படுத்தி சில காட்சிகள் வருகின்றன. அந்த கலவரத்தின் போது முஸ்லிம் மக்களை கொன்றவர் பெயர் பாபா பஜ்ரங்கி என்று படத்தில் வருகிறது. படத்தில் அந்த கேரக்டர்தான் முக்கிய வில்லனாக காட்டப்பட்டுள்ளது.
எல்2 எம்புரான் படத்தில் மேலும் சில காட்சிகளில் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவது போன்ற காட்சிகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் வட மாநிலங்களில் எல்2 எம்புரான் படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும், வில்லனின் பெயரை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.
இதையடுத்து எல்2 எம்புரான் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய 17 காட்சிகளை சரி செய்து உடனடியாக நீக்கவும் வில்லனின் பெயரை மாற்றவும் படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவற்றை சரி செய்து மீண்டும் தணிக்கைக்கு படத்தை அனுப்பி மீண்டும் ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் இவ்வளவு சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்கும் நிலையில், அதை தணிக்கை குழு எப்படி சென்சார் செய்து வெளியிட அனுமதித்தனர் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த சர்ச்சைகள் காரணமாக எல்2 எம்புரான் படத்தின் வசூல் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த படம் வெளியான இரண்டே நாட்களில் உலகளவில் ரூ. 100 கோடி வசூலை கடந்த முதல் மலையாள படம் என்ற சாதனையை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.





