மணிரத்னம் மற்றும் பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சுதா கொங்கரா. ஸ்ரீகாந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டோரை வைத்து முதல் படமாக துரோகி படத்தை இயக்கினார். அந்தப் படம் நன்றாக இருந்தாலும் சில காரணங்களால் தோல்வியடைந்தது. இதனையடுத்து சில வருடங்கள் பிரேக் எடுத்தவர் இறுதிச்சுற்று படத்தின் மூலம் தரமான எண்ட்ரியை கொடுத்தார்.
பாக்ஸிங்கில் பெண் சாதிப்பதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படத்தில் மாதவன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேக்கிங், திரைக்கதை என அனைத்துமே அட்டகாசமாக இருக்க படம் மெகா ஹிட்டடித்தது. ரித்திகா சிங் அறிமுகமான முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றார். அந்தப் படத்தின் மூலம் சுதா கொங்கரா முன்னணி இயக்குநர் என்ற அந்தஸ்தை பெற்றுவிட்டார்.
அந்தப் படத்துக்கு பிறகு சூர்யாவை வைத்து இயக்கிய சூரரைப் போற்று படமும் மெகா ஹிட்டானது. மேலும் அந்தப் படம் தேசிய விருதுகளையும் அள்ளியது. இந்தச் சூழலில் திருவான்மியூர் கடற்கரையில் சில நாட்களுக்கு முன்பு இறுதிச்சுற்று படம் திரையிடப்பட்டது. பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் படத்தை பார்த்து ரசித்தனர். அதுதொடர்பான வீடியோ இணையத்தில் ட்ரெண்டானது.
இந்நிலையில் அந்த வீடியோவை பகிர்ந்து பல விஷயங்களை உருக்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் சுதா கொங்கரா. அவர் தன்னுடைய பதிவில், “நான் இயக்கிய முதல் படமான துரோகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. டீசண்ட்டான இயக்கம் மோசமான திரைக்கதை என இருந்தாலும் அது மட்டும் போதாது. அதை நினைத்து நான் வெட்கப்படவில்லை. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று நினைத்து வெட்கப்பட்டு சினிமாவை விட்டே விலக நினைத்தேன்.
அதன் பிறகு உன்னிடம் 4 வரி கதையை சொன்னேன். ஞாபகம் இருக்கிறதா மேடி?.. அனைத்தையும் விடு. இதை செய் என்று நீ என்னிடம் சொன்னாய். நான் வீட்டுக்கு வந்து புத்துணர்வு பெற்று 7 மாதங்களில் இந்தக் கதையை எழுதி முடித்தேன். அதை கேட்ட நீ நிச்சயம் நடிக்கிறேன் என உறுதி கொடுத்தாய். அப்போதுதான் யுத்தம் தொடங்கியது. யாரும் இந்தப் படத்தை தயாரிக்கவோ, எந்த ஹீரோயினும் இதில் நடிக்கவோ தயாராக இல்லை. அதனால் ரொம்பவே கஷ்டப்பட்டோம். அந்த சமயத்தில் நல்ல இயக்குநரை தேடு இந்தக் கதையை உனக்காக தர தயார் என்றேன்.
ஆனால் இதை நீ செய்யவில்லை என்றால் நான் வேறு யாருடனும் இந்தக் கதையில் பணியாற்ற மாட்டேன் என்றாய். மேலும் நீதான் இந்தப் படம் என்று சொன்னாய். இப்படி எண்ணற்ற கருத்துக்களும் விமர்சனங்களும் கிடைத்தன. படத்தின் டைட்டில் நெகட்டிவ், முதல் காட்சி சரியில்லை, கேரக்டர்கள் மக்களுக்கு பிடிக்காது, பிரபல நடிகை தேவை, இந்தப் படம் ஹிந்தியில் ஹிட் ஆகும். தமிழில் ஓடாது என எவ்வளவு கருத்துக்கள் வந்தன.
மிகச்சிறந்த சினிமாவை உருவாக்குகிறாய். அதை மறக்காதே. உனது மனம் எதை சரி என்று சொல்கிறதோ அதை செய் உன்னுடன் நான் இருக்கிறேன் சுதா என்று சொன்னாய். அப்படி நீ மட்டும்தான் சொன்னாய். பிறகு நம்முடன் நின்ற ஒரே மனிதர் தயாரிப்பாளர் மட்டும்தான். அப்படி உருவான படத்தை மக்கள் மழையில் நனைந்தபடி, மதி மற்றும் பிரபுவுக்காக கைத்தட்டுவதை பார்க்கும்போது ஒன்றே ஒன்றுதான் சொல்ல தோன்றுகிறது. கட்டுப்பாடில்லாமல் பறக்க கற்றுக்கொடுத்ததற்கு நன்றி மேடி. என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. இல்லையெனில் நான் பிறப்பதற்கு முன்பே இறந்திருப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.





