செல்லமே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஷால். இயக்குனர் தருண் கோபி இயக்கிய திமிரு என்ற அதிரடி ஆக்சன் படம் விஷாலுக்கு பெரிய அடையாளத்தை வரவேற்பை பெற்றுத் தந்தது. தொடர்ந்து சண்டக்கோழி சிவப்பதிகாரம் தாமிரபரணி துப்பறிவாளன் படங்கள் மூலம் நடிகர் விஷால் முன்னணி நடிகராக மாறினார்.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அவர் நடித்த பல படங்கள் மாபெரும் தோல்வி படங்களாக இருந்தன. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படம் பெரிய வெற்றியை கொடுத்தது. ரூ. 100 கோடி வசூலித்த படமாகவும் அமைந்தது. ஆனால் இந்த படம் அபார வெற்றிக்கு காரணமாக இருந்தது நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து ஹரி இயக்கத்தில் விஷால் பிரியா பவானி ஷங்கர் நடித்த ரத்னம் படமும் வெற்றி பெறாமல் ஏமாற்றத்தை தந்தது. துப்பறிவாளன் 2 படத்தை தானே டைரக்ட் செய்து நடிக்கவும் முடிவு செய்த விஷாலை நம்பி எந்த தயாரிப்பாளரும் அந்த படத்தை தயாரிக்க முன்வரவில்லை. விஷால் பிலிம் பேக்டரி மூலமே அந்த படத்தை தனது சொந்த தயாரிப்பில் உருவாக்கும் விஷாலின் முயற்சியும் கைகூடவில்லை.
இந்த சூழலில் நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படம் மதகஜ ராஜா. 12 ஆண்டுகளுக்கு முன் சுந்தர் சி டைரக்ட் செய்த இந்த படம் பல காரணங்களால் திரைக்கு வராமல் முடங்கிப் போய் கிடந்தது. காமெடி நடிப்பில் சந்தானம் கலக்கிய இந்த படம் ஒரு வழியாக கடந்த பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்தது.
மதகஜ ராஜா படத்தின் அபார வெற்றியை தொடர்ந்து விஷால் நடிக்க மீண்டும் சுந்தர் சி கூட்டணியில் அடுத்த படம் உருவாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகளில் சுந்தர் சி ஆர்வமாக செயல்பட்டு வந்த நிலையில், இப்போது அந்த படத்தை சுந்தர் சி கிடப்பில் போட்டு விட்டார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பில் முழு கவனமும் செலுத்தி வருகிறார்.
மதகஜ ராஜா படம் தந்த வெற்றியை அடுத்து தனது சம்பளத்தை நடிகர் விஷால் தாறுமாறாக உயர்த்தி கேட்டிருக்கிறார். அந்த படம் 12 ஆண்டுகளுக்கு முன் சுந்தர் சி இயக்கிய படம். சந்தானம் மனோபாலா காமெடிதான் படத்தை வெற்றி பெற செய்தது என இயக்குனர் சுந்தர் சி உள்ளிட்ட அனைவருக்குமே தெரியும். இந்த நிலையில் மதகஜ ராஜா வெற்றிக்காக தனது சம்பளத்தை தாறுமாறாக சுந்தர் சியிடம் விஷால் கேட்டதால் கடுப்பான சுந்தர் சி, அந்த படமே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு படம்தானே ஹிட் கொடுத்தீங்க, இவ்வளவு அவசரம் தேவையா என ரசிகர்கள் விஷாலை கலாய்த்து வருகின்றனர்.





