இயக்குனர் சுந்தர் சி தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்தவர். காமெடி கலந்த இவரது காதல் கதை கொண்ட படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தன. இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சுந்தர் சி இன்று முன்னணி இயக்குனராக, நடிகராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1990களில் சுந்தர் சி இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்தது. அவர் இயக்கிய முதல் படம் இதுதான். இதில் கார்த்தி, ரம்பா, மணிவண்ணன், கவுண்டமணி செந்தில், கசன்கான், ஜெய்கணேஷ், ஜோதிமீனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இந்த படத்தின் அபார வெற்றிக்கு பிறகு முறைமாமன், மேட்டுக்குடி, ஜானகிராமன், அருணாசலம், அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சுந்தர் சி, இப்போது பல படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். அவர் இயக்கிய அரணமனை படம் வெற்றியை தொடர்ந்து அரண்மனை 2, 3 மற்றும் 4ம் பாகம் வரை வந்த நிலையில், இப்போது அரண்மனை 5 படம் அடுத்து உருவாக உள்ளது.
இந்நிலையில் உள்ளத்தை அள்ளித்தா படம் குறித்து இயக்குனர் சுந்தர் சி கூறியதாவது, உள்ளத்தை அள்ளித்தா படம் எடுக்கும்போது நக்மா தான் தமிழ் சினிமாவில் நெம்பர் ஒன் கதாநாயகி. அதனால் படத்தோட தயாரிப்பாளர் நக்மாதான் ஹீரோயின் என்று முடிவு செய்துவிட்டார். என்னோட கதை ஸ்கிரிப்ட் படி இளையராஜா இசைக்குழுவில் கதாநாயகி வயலின் வாசிப்பார். ஹீரோ கோரஸ் பாடுகிற பாடகர். இதுதான் அந்த படத்தோட உண்மையான கதை.
ஆனால் நக்மா கதாநாயகி என்றால் எப்படி வயலின் வாசிக்கிறவரா காட்ட முடியும்? அதனால் நக்மா பணக்கார வீட்டுப் பெண் என மாற்றி வைத்தோம். அப்போ ஹீரோ கோரஸ் பாடுகிற பாடகராக வேண்டாம். நக்மா வீட்டு கார் டிரைவராக கேரக்டரை மாற்றிவிடவும் முடிவு செய்தோம்.
அப்புறம் இந்த டிரைவர்தான், நக்மாவுக்கு பார்த்த மாப்பிள்ளை, அவரும் பணக்கார வீட்டுப்பையன் என கதையை மாற்றியமைத்தோம். இதுதான் பிறகு கார்த்தி, ரம்பா நடித்த உள்ளத்தை அள்ளித்தா படமாக வெளியானது. இப்படி முதலில் உருவான ஒரிஜினல் கதை வேறு, பிறகு வெளியான படம் வேறாக இருந்ததற்கு நடிகை நக்மா தான் காரணம் என்று சுந்தர் சி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





