நடிகர் வடிவேலு காமெடியில் அசத்திய பல படங்களில் மிக முக்கியமான ஒரு படம் சுந்தரா டிராவல்ஸ். மலையாளத்தில் ஈ பறக்கும் தல்லிகா என்ற பெயரில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. ஒரு கடாமுடா டஞ்சன் பஸ்சை கதையின் மையப் பொருளாக கொண்டு காமெடி கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இந்த மலையாள படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த மலையாள படத்தை அப்படியே ரீ மேக் செய்து இயக்குனர் தாஹா இயக்கத்தில் தமிழில் சுந்தரா டிராவல்ஸ் என்ற பெயரில் அந்த படம் உருவானது. நடிகர்கள் முரளி வடிவேலு காமெடி காம்போவில் கடந்த 2002ம் ஆண்டில் வெளியான சுந்தரா டிராவல்ஸ் படம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
சுந்தரா டிராவல்ஸ் படத்தில் முரளி வடிவேலு புதுமுக அறிமுகம் ராதா இயக்குனர் பி வாசு வினுசக்கரவர்த்தி இளவரசு இயக்குனர் மணிவண்ணன் பாண்டு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். முழுநீள நகைச்சுவைப் படமாக இது தமிழ் சினிமா ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இந்த படத்தின் காமெடி காட்சிகள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றன.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை நகைச்சுவை காட்சிகள் நிறைந்த இந்த படம் நடிகர்கள் முரளிக்கும் வடிவேலுவுக்கும் மிகப்பெரிய ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இதே போல் பல படங்களில் முரளி வடிவேலு காமெடி கூட்டணி பெரிய அளவில் சக்சஸ் ஆனது.
இந்நிலையில் கடந்த 2002ம் ஆண்டில் வெளியான சுந்தரா டிராவல்ஸ் படத்தை 23 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் மெருகேற்றி புதிய தொழில்நுட்பத்தில் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. வருகிற மே மாதம் இந்த படம் வெளியாகும் என்று படக்குழு தரப்பில் போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் மே மாதத்தில் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளனர்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து ரி ரிலீஸ் படங்கள் அதிகரித்து வரும் நிலையில் அந்த வரிசையில் இப்போது முரளி வடிவேலு காமெடி காம்போவில் உருவான சுந்தரா டிராவல்ஸ் மீண்டும் திரைக்கு வருவது நகைச்சுவை படங்களை விரும்பி ரசிக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் படம் ரி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.





