தர்பார், அண்ணாத்த ஆகிய படங்களின் தோல்விக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினி. பெரும் நட்சத்திர பட்டாளம் களமிறங்கியுள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. பான் இந்தியா படமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் வெளியாகவுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.
பீஸ்ட்டால் ரோஸ்ட் செய்யப்பட்டதால் நெல்சனும், வரிசையாக இரண்டு படங்கள் தோல்வியடைந்ததால் ரஜினிகாந்த்தும் இந்தப் படத்தை ரொம்பவே கவனமாக அணுகியிருக்கின்றனர். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடந்தது. இதில் படக்குழுவினர், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன், ரசிகர்கள் கலந்துகொண்டனர்.
அடுத்த சூப்பர் ஸ்டார் குறித்த பேச்சு ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் விழாவில் ரஜினிகாந்த் பேசிய அத்தனை விஷயங்களும் விஜய்யை தாக்குவது போல் இருந்ததாக ரஜினி ரசிகர்கள் குறிப்பிட்டனர். அதேபோல் விஜய்யும் பதிலடி கொடுப்பார் என விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதேசமயம் ஒரே சூப்பர் ஸ்டார் காலம் எல்லாம் மலையேறிவிட்டதாக கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசியிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் ப்ளூ சட்டைமாறனோ ரஜினிக்கு இன்செக்யூரிட்டி வந்துவிட்டது என ஓபனாகவே கலாய்த்துவருகிறார். இதனால் சமூக வலைதளம் சூப்பர் ஸ்டார் அரியணைக்கான போர்க்களமாக மாறியிருக்கிறது. எது எப்படியோ படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருவேளை ஜெயிலரும் கலவையான விமர்சனங்களை பெறும் சூழலில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்று பட்டாபிஷேகம் நடக்கும் சூழல் நிலவிவருவது என்பதுதான் உண்மை.
இந்நிலையில் ஜெயிலர் படத்தில் யார் யாருக்கு என்னென்ன ரோல் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற ஜெயிலர் கதாபாத்திரத்திலும் அவருக்கு மனைவியாக ரம்யா கிருஷ்ணனும் நடிக்கிறார் என கூறப்படுகிறது. அதேபோல் தமன்னா தெலுங்கு நடிகையாகவே நடித்திருக்கிறார். அதன் காரணமாகத்தான் காவாலா பாடலின் ஆரம்ப வரிகள் தெலுங்கி எழுதப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் வசந்த் ரவி ரஜினிக்கு மகனாக நடித்திருக்கிறார் என்றும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.
இதற்கிடையே ரஜினியின் மகனான வசந்த் ரவியை ஒரு கும்பல் கடத்திவிடும் என்றும் அவர்களிடமிருந்து தனது மகனை ரஜினி மீட்பதுதான் ஜெயிலர் படத்தின் ஒன்லைன் என்றும் முணுமுணுப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல ரஜினி தன் மகனை மீட்க போராடும் சமயத்தில் அவருக்கு உதவும் நண்பர்களாக மோகன்லால் போன நடிகர்கள் படத்தில் வருகிறார்கள் என்றும் முனுமுனுக்கப்படுகிறது





