நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தன்னை ஒரு நல்ல நடிகராக வெளிப்படுத்தி வருகிறார். தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். ஆரம்பத்தில் சில படங்களில் துணை நடிகராக நடித்து பிறகு தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் நாயகனாக சினிமாவில் அவர் அறிமுகமானவர்.
தொடர்ந்து பீட்சா சூது கவ்வும் ரம்மி பண்ணையாரும் பத்மினியும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா காதலும் கடந்து போகும் போன்ற படங்களில் நடித்து முக்கிய நடிகராக மாறினார். பிறகு தர்மதுரை ஆண்டவன் கட்டளை கருப்பன் ரெக்க பேட்ட மாஸ்டர் விக்ரம் போன்ற படங்களால் விஜய் சேதுபதி முன்னணி நடிகராக பெரிய வரவேற்பை பெற்றார்.
கடந்த ஆண்டில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படம் வெளியாகி பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெரிய ஆதரவை பெற்றது. இந்த படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை குரங்கு பொம்மை பட இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் டைரக்ட் செய்திருந்தார். விஜய் சேதுபதிக்கு இது 50வது படமாக இருந்து பெரிய கம்பேக் கொடுத்தது.
மகாராஜா படத்துக்கு பிறகு விஜய் சேதுபதி நடித்த ஏஸ் படம் சமீபத்தில் வெளியாகி பெரிய ஏமாற்றத்தை தந்தது. இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறாமல் தோல்வியடைந்தது. ஆனால் அதற்கு பின்பு கடந்த மாதம் 25ம் தேதி வெளியான தலைவன் தலைவி படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
விஜய் சேதுபதி நித்யா மேனன் கணவன் மனைவியாக நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜன் டைரக்ட் செய்திருக்கிறார். குடும்ப கதைக்களத்தில் உருவான இந்த படத்தில் குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்களை பிரச்னைகளை பிணக்குகளை அதனால் ஏற்படும் சண்டைகளை மையப்படுத்திய படமாக இது வெளியானது.
யோகிபாபு காளி வெங்கட் மைனா நந்தினி தீபா ஆர்கே சுரேஷ் சரவணன் தேனப்பன் சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த படம் இதுவரை உலகம் முழுவதும் 90 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. இன்னும் தியேட்டர்களில் இந்த படம் ஓடிக் கொண்டு இருப்பதால் மகாராஜா படம் போல, தலைவன் தலைவி படமும் விஜய் சேதுபதிக்கு 100 கோடி ரூபாய் வசூல் படமாக அமையும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.





