தமிழ் சினிமாவில், காமெடி நடிகர்கள் ஹீரோக்களாக மாறி வெற்றி பெற்று வருகின்றனர். வடிவேலு, சந்தானம், யோகி பாபு போன்ற காமெடி நடிகர்களை தொடர்ந்து, நடிகர் சூரியும், வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை’ படம் மூலம், ஹீரோ ஆனார். கான்ஸ்டபிள் குமரேசன் கேரக்டரில் மிகவும் பக்குவப்பட்ட நல்ல நடிப்பை சூரி வெளிப்படுத்தி, ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
‘விடுதலை’ படத்தின், 2ம் பாகம் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சில மாதங்களில், விடுதலை 2 படம் ரிலீஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் எழுதும் கதையில் மீண்டும் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், இது சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் படமாக இருக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
துரை செந்தில்குமார் இயக்கத்தில், இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தில் சசிக்குமார், சமுத்திரக்கனி, உன்னிமுகுந்தன், மொட்டை ராஜேந்திரன், ரேவதி ஷர்மா, ஷிவதா நாயர், மைம் கோபி என முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தயாரிப்பாளர் கே.குமார் இந்த படத்தை தயாரிக்கிறார்.
விடுதலை படத்தில் நடித்த பிறகு, இன்னும் சில படங்களில் நடிக்க சூரி ஏற்கனவே ஒப்பந்தம் ஆன நிலையில், இந்த படத்திலும் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். தொடர்ந்து ஹீரோவாக நடிக்க சூரி ஒப்பந்தம் ஆகி வருவதால், இனி மீண்டும் காமெடி ரோல்களில் சூரி நடிப்பாரா என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
தமிழ் சினிமாவை பொருத்த வரை, ஹீரோவாக நடிக்கும் நட்சத்திரங்கள் வில்லனாக நடிக்க துவங்கி விட்டால், பிறகு வில்லனாக நடிக்க மட்டுமே வாய்ப்புகள் தேடி வரும். விஜய் சேதுபதி போன்ற ஒரு சிலர் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. அதுபோல், காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடித்த பிறகு, மீண்டும் காமெடி ரோல்களில் நடிப்பதை அவர்களும் விரும்ப மாட்டார்கள். ரசிகர்களும் அதை வெகுவாக ஏற்றுக்கொள்வது இல்லை.
இதற்கு நடிகர் வடிவேலு, சந்தானம் போன்றவர்களை உதாரணமாக சொல்லலாம். அவர்கள் ஹீரோவான பிறகு, தனி காமெடி ரோல்களில் நடித்த படங்களில், அவர்கள் நடிப்பு பழையபடி ரசிக்கப்படவில்லை. மேலும், காமெடி கலந்த மெயின் ரோலில் நடித்த படங்களில் மட்டுமே அவர்கள் வெற்றி பெற முடிந்தது. ஆனால், ஹீரோவாக நடித்த முதல் படத்திலேயே சூரி, ஆக்ஷன் ஹீரோவாக விடுதலை படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.அதனால், இனி காமெடி நடிப்புக்கு ‘குட்பை’ சொல்லவும் அதிக வாய்ப்புள்ளது.





