கங்குவா திரைப்படத்தின் படுதோல்விக்கு பிறகு சூர்யா, அடுத்தடுத்து படங்களை விரைவாக கொடுப்பது என்று முடிவு செய்து இருக்கிறார். அதில் முதலாவதாக தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அவர் நடித்து முடித்திருக்கிறார். இது சூர்யாவின் 44-வது திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ரெட்ரோ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
கேங்ஸ்டர் ஆக இருக்கும் ஒருவர் காதலிக்காக அனைத்தையும் கைவிடுவது தான் இந்த திரைப்படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்துவது போலவே, ரெட்ரோ படத்தின் டீசர் அமைந்தது. அதில், சூர்யா தனது காதலியாக நடித்திருக்கும் பூஜா ஹெக்டேவிடம் அனைத்தையும் கைவிடுவதாக பேசி இருப்பார்.
இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இதற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தற்போது தனது 45 வது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. ஆர் ஜே பாலாஜி இயக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் திரிஷா, லப்பர் பந்து நாயகி சுவாசிகா, மலையாள நடிகர் இந்திரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இது முதலில் ஃபேண்டஸி திரைப்படமாக எடுக்கப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இதன் கதைக்களமே வேறு என்று பேசிக் கொள்கிறார்கள். முழுக்க முழுக்க நீதிமன்றத்தை மையமாக வைத்தே இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை உறுதிப்படுத்தும் வகையில் சூர்யா இதில் வழக்கறிஞராக நடிப்பது தெரிய வந்திருக்கிறது. இது மட்டுமல்லாமல் திரிஷாவும் படத்தில் வழக்கறிஞராக தான் வருகிறார். இருவரும் எதிரெதிர் தரப்பை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதற்கு முதலில் ஏ ஆர் ரகுமான் தான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் படத்திற்குள் வந்தார்.
இதனிடையே படத்தில் ஆர் ஜே பாலாஜி நடிப்பதாகவும் அவருக்கு வில்லன் கதாபாத்திரம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரும் வழக்கறிஞர் கெட்டப்பிலேயே வருகிறார். இப்படியான சூழலில் சூர்யாவின் 45 ஆவது திரைப்படத்திற்கு பேட்டைக்காரன் என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்த டைட்டிலுக்கு சூர்யா ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.





