தமிழ் சினிமாவில் பாடகராக 3 தலைமுறை ரசிகர்களை கொண்டவர் எஸ்பி பாலசுப்ரமணியம். எம்ஜிஆர் சிவாஜி காலம் துவங்கி, ரஜினி, கமலுக்கு பிறகு விக்ரம், தனுஷ் காலம் வரை எஸ்பி பாலசுப்ரமணியம் 50 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பன்மொழி பாடகராக திகழ்ந்தவர்.
அதுமட்டுமின்றி பல படங்களுக்கு எஸ்பி பாலசுப்ரமணியம் பின்னணி குரலிலும் பேசியிருக்கிறார். குறிப்பாக கமல்ஹாசன் நடித்த சில படங்களுக்கு தெலுங்கு மொழியில் பின்னணி பேசியவர் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம். எம்ஜிஆருக்கு எஸ்பிபி பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் பெரிய அளவில் அவருக்கு வரவேற்பை பெற்றுத் தந்தது.
ரஜினி, கமலுக்கு பல படங்களில் எஸ்பிபி பாடிய பாடல்கள், அவர்களது திரைப்பட வளர்ச்சிக்கு பெரிய அளவில் துணை நின்றது. குறிப்பாக 80, 90களில் எஸ்பிபி பாடிய பாடல்கள் ரஜினி, கமல் படங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதிலும் ரஜினிக்கு ஒப்பனிங் சாங் எஸ்பிபி குரலில் பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.
குறிப்பாக நான் ஆட்டோக்காரன், வந்தேண்டா பால்காரன், அதாண்டா இதாண்டா அருணாசலம் நான்தான்டா, தேவுடா தேவுடா, ஒருவன் ஒருவன் முதலாளி, ராஜாவுக்கு ராஜா நான்டா உள்ளிட்ட பல பாடல்கள் எஸ்பிபி குரலில் ரஜினிக்கு பெரிய அளவில் ரீச் கொடுத்தது. நான் பொல்லாதவன் பாடல், ரஜினிக்கு இப்போதும் டிரண்டிங் ஆன பாடலாக எஸ்பிபி குரலில் ஒலிக்கிறது.
எஸ்பி பாலசுப்ரமணியனுக்கு சரண் என்ற மகனும் பல்லவி என்ற மகளும் இருக்கின்றனர். எஸ்பிபி சரண், சில படங்களில் நடித்திருக்கிறார். பல பாடல்களும் பாடி இருக்கிறார். நல்ல குரல் வளம், நடிப்பு திறன் இருந்தாலும் எஸ்பி பாலசுப்ரமணியம் அளவுக்கு அவரால் சினிமாத்துறையில் பெரிய அளவில் வரவேற்பை பெற முடியவில்லை.
பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம், சிறந்த பாடகர் மட்டுமல்ல. நல்ல நடிகராகவும் பெயர் வாங்கியவர். மிகச்சிறந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் ஜொலித்தவர். அதே போல் எஸ்பிபி சரண் அவரது வாரிசாக பெரிய சாதனைகளை புரியவில்லை. எனினும் சென்னை 28, ஆரண்ய காண்டம் ஆகிய படங்களை எஸ்பிபி சரண் தயாரித்திருக்கிறார். இப்போது அதிகாரம் என்ற அரசியல் கதைக்களம் கொண்ட வெப் சீரிஸ் ஒன்றை இயக்குகிறார். அதுல்யா ரவி, ஜான் விஜய், அபிராமி, வினோதினி நடித்துள்ள இந்த வெப்சீரிஸ் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இயக்குனராக எஸ்பிபி சரண் பெரிய ரீச் கொடுப்பாரா, என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.





