இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பதற்கு தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் மத்தியில் பெரும் போட்டியே இருந்து வருகிறது. குறிப்பாக அவரது படத்தில் நடிப்பதே தங்களுக்கு மிகப்பெரிய கவுரவம் என்று நினைக்கும் அளவுக்கு இந்திய அளவில் தன்னை ஒரு சிறந்த படைப்பாளியாக தனது படங்கள் மூலம் நிரூபித்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன்.
தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் தமிழ் சினிமா இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அடுத்து ஆடுகளம், வடசென்னை, விசாரணை அசுரன், விடுதலை போன்ற படங்களால் தன்னை நிரூபித்தவர். காமெடி நடிகர் சூரியை விடுதலை படம் மூலம் கதாநாயகனாக்கியவர் வெற்றிமாறன்தான். சூரி இப்போது கருடன், கொட்டுக்களி படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள படம் வாடிவாசல். சூர்யா, அமீர் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, நீண்ட நாட்களாக துவங்கப்படாமல் இருக்கிறது. விடுதலை 2 படப்பிடிப்பில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வெற்றிமாறன் பிஸியாக இருந்து வருகிறார். இந்த ஆண்டுக்குள் இறுதிக்குள் விடுதலை 2 வெளியாக அதிக வாய்ப்புள்ளது.
பருத்திவீரன் படம் தயாரிப்பு விவகாரத்தில், 17 ஆண்டுகளாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இதுகுறித்த பஞ்சாயத்து, சில மாதங்களுக்கு முன் பெரிய அளவில் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அமீர் குறித்து கடுமையாக விமர்சித்தது சினிமா துறையினர் மத்தியில் அனல் பறந்தது.
இந்த விவகாரத்தில், அமீருக்கு ஆதரவாக பாரதிராஜா, சமுத்திரக்கனி, கரு பழனியப்பன், சசிக்குமார், சேரன், வெற்றிமாறன் உள்ளிட்டோர் கொதித்து எழுந்தனர். இதில் சூர்யா தரப்பினர் மவுனம் சாதித்ததால் வாடிவாசல் படத்தில் சூர்யா, அமீர் இணைந்து நடிப்பது சாத்தியமில்லை என்றே தகவல் பரவி வந்தது. மேலும் வாடி வாசல் படப்பிடிப்பும் ஆண்டுக்கணக்கில் தாமதமானது.
இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் வாடிவாசல் படப்பிடிப்பு துவங்குகிறது. இதில் கதாநாயகனாக சூர்யாவும், வில்லனாக அமீரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பை 2 ஆண்டுகள் நடத்திக்கொள்ள, இயக்குனர் வெற்றிமாறன் இப்போதே திட்டமிட்டுள்ளார். வாடிவாசல் 2 அல்லது 3 பாகங்களாக வெளிவரலாம். பழைய கசப்புகளை மறந்து எந்தவிதமான ஈகோ பிரச்னையும் இன்றி இதில் அமீருடன் சேர்ந்து நடிக்க சூர்யாவும் சம்மதித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





