“கங்குவா” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இத்திரைப்படம் ஒரு வரலாற்று ஃபேண்டசி திரைப்படமாக உருவாகி வருகிறது. மறுபிறவியை அடிப்படையாக கொண்ட கதையம்சத்தில் வரலாற்றுக்காலம், நிகழ்காலம் என நான் லீனியர் முறையில் இத்திரைப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளாராம் சிறுத்தை சிவா.

“கங்குவா” திரைப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், தாய்லாந்து ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க 3D தொழில்நுட்பத்தில் உருவாகும் இத்திரைப்படம் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்திய சினிமாவில் 10 மொழிகளில் வெளியாகும் திரைப்படம் என்ற சாதனையை படைக்க உள்ளது “கங்குவா”.
கடந்த சூர்யா பிறந்தநாளின்போது “கங்குவா” திரைப்படத்தின் அட்டகாசமான கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளிவந்தது. அதில் சூர்யாவின் தோற்றம் மாஸ் ஆக அமைந்திருந்தது. மிகவும் வித்தியாசமான ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்து சூர்யா நடித்து வருவதாக தெரிய வருகிறது.

இந்த நிலையில் “கங்குவா” திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. முதல் பாகம் வெளிவந்த பிறகு இரண்டாம் பாகத்திற்காக 25 நாட்கள் சில காட்சிகளை படமாக்க உள்ளார்களாம். திடீரென இந்த முடிவை “கங்குவா” படக்குழு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
“கங்குவா” திரைப்படத்தின் இந்த திடீர் முடிவால் சூர்யாவின் அடுத்த படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளதாம். அதாவது சூர்யா, சுதா கொங்கராவின் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தில் துல்கர் சல்மான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குவதாக இருந்ததாம். ஆனால் “கங்குவா” படக்குழு எடுத்த திடீர் முடிவால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறதாம்.





