சினிமாவில் எப்போதுமே ராசியான நடிகர், ராசியான நடிகை என்ற சென்டிமென்ட் உண்டு. அது இயக்குனர்களுக்கும் இருக்கும். குறிப்பிட்ட தேதியில் சிலர் படப்பிடிப்பை துவங்குவார்கள், முதலில் குறிப்பிட்ட காட்சியை தான் படம் பிடிப்பார்கள், குறிப்பிட்ட கேரக்டர் பெயரை ஒவ்வொரு படத்திலும் பயன்படுத்துவார்கள். இது தொடர்ந்து நடந்து வருகிறது.
ஆனால் சில படங்கள், எந்த சென்டிமென்ட் இல்லாமலும் வெளியாகி தாறுமாறான வெற்றியை பெற்று விடுவதுண்டு. அந்த படத்திற்கான எந்த ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக வெளியாகி பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று, போட்ட பட்ஜெட்டை விட பலமடங்கு லாபத்தை அள்ளித் தந்துவிடும்.
சமீபத்தில் அப்படிப்பட்ட ஒரு படமாக வெளியாகி பெரிய வரவேற்பை, வெற்றியை, கணிசமான லாபத்தை பெற்றுத் தந்த படம்தான் லப்பர் பந்து. அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய இந்த படத்தில் ஹரீஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சுவாசிகா, பால சரவணன், காளி வெங்கட், ஜென்சன் திவாகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் நடித்திருந்த அனைத்து கேரக்டர்களுமே ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக கெத்து தினேஷ் மனைவியாக வரும் யசோதை கேரக்டரில் நடித்த சுவாசிகா என்ற மலையாள நடிகை தமிழ் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். ஒரு கோபக்கார மனைவியாக, மகள் மீது பாசம் கொண்ட தாயாக, மாமியார் மீது அக்கறை கொண்ட மருமகளாக அவரது நடிப்பு வேற லெவலில் இருந்தது.
லப்பர் பந்து படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, மலையாள நடிகை சுவாசிகாவுக்கு தமிழில் பட வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. எனினும் அவர் தனக்கு முக்கியத்துவம் இருக்கக் கூடிய கேரக்டர்களில் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறார். அந்த வகையில் தமிழில் ஒரு படத்தில் நடிக்க இப்போது சுவாசிகா கமிட் ஆனதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கும் சூர்யா 45 படத்தில், நடிகை சுவாசிகா முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவையில் உள்ள அக்ரிகல்சர் யுனிவர்சிடியில் நேற்று துவங்கிய ஷூட்டிங்கில் அவர் பங்கேற்றுள்ளார். படத்தின் நாயகி திரிஷா என்றாலும், சுவாசிகா வலுவான கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது.





