- Advertisement -
Homeபொழுதுபோக்குசென்னையில் முதன் முறையாக சிம்பொனி அரங்கேற்றம்… இசை ரசிகர்கள் கொண்டாட்டம் - விரைவில் தேதி, இடம்...

சென்னையில் முதன் முறையாக சிம்பொனி அரங்கேற்றம்… இசை ரசிகர்கள் கொண்டாட்டம் – விரைவில் தேதி, இடம் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது!

- Advertisement -

இசைஞானி என்று சினிமா இசை ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா 50 ஆண்டு காலமாக இசை சக்ரவர்த்தியாக இருந்து வருகிறார். தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என பல்வேறு மொழிகளில் இசையால் ரசிகர்களின் மனங்களை வென்றிருக்கிறார். இப்போதும் இசையில் பல சாதனைகளை செய்து வருகிறார்.

கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி லண்டனில் தனது வேலியண்ட் சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார். இதன்மூலம் ஆசியா கண்டத்தில் சிம்பொனியை அவரே எழுதி இசையமைத்து சர்வதேச அளவில் அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற வரலாற்றுச் சாதனையை இசைஞானி இளையராஜா படைத்தார்.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவரது திரை இசை பயணம் அனுபவங்கள் குறித்தும் பாராட்டி பேசினர்.

இந்த விழாவில் சிறப்பம்சமாக அவர் லண்டனில் அரங்கேற்றிய சிம்பொனி அதே ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா குழுவால் விழா மேடையில் அரங்கேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சிம்பொனி அரங்கேற்றத்தை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடத்த தனக்கு அனுமதியும் உதவியும் செய்ய வேண்டும் என்று அந்த விழா மேடையில் தனது ஆசையை இளையராஜா, முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்திருந்தார்.

அதற்கு முதல்வர் ஸ்டாலினும் அப்போதே சம்மதம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழ்நாட்டில் சிம்பொனி அரங்கேற்றம் குறித்த அறிவிப்பு எப்போது வெளிவரும் என்று இசை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் அதுகுறித்த அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.

அதன்படி சென்னையில் வரும் மே மாதம் 30ம் தேதி சிம்பொனி நிகழ்ச்சி நடக்க உள்ளது. விரைவில் அந்த நிகழ்ச்சி நடைபெறும் இடம், நிகழ்ச்சியில் பங்கேற்க முன்பதிவு ஆரம்பம் தேதி, அதற்கான கட்டணங்கள் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. சென்னையில் முதல் முறையாக இளையராஜாவின் முதல் சிம்பொனி அரங்கேற உள்ளதால் அவரது இசை ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

சற்று முன்