மத்திய அரசு சார்பில், ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் கலந்துக்கொள்ள படங்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படுவது, ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த முறை, மலையாள படமான 2018 ஆஸ்கர் விருது போட்டிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
ஆஸ்கர் விருது போட்டியில் கலந்துக்கொள்ளும் படங்களை தேர்வு செய்ய, மத்திய அரசு சார்பில் தேர்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு சார்ந்தவர்கள், நல்ல தரமான படங்களை பார்த்து, அதை ஆஸ்கர் விருது போட்டியில் பங்கேற்க அனுப்புவது நடைமுறையில் இருந்து வருகிறது.
அந்த தேர்வுக்குழுவில் தமிழ் சினிமா தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மாதேஷ், காஸ்ட்யூமர் வாசுகி பாஸ்கர், எடிட்டர் ஸ்ரீதர் பிரசாத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆனால், தமிழ் சினிமா சார்ந்த இவர்கள் இருந்தும், மலையாள படமான 2018 தான், ஆஸ்கர் விருது போட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
தமிழில் வெளிவந்த மாமன்னன், விடுதலை, ராக்கி போன்ற படங்கள் ஆஸ்கர் விருது போட்டிக்கான படங்கள் என்ற பட்டியலில் இருந்தும், மலையாள படம் 2108 மட்டுமே அனுப்பப்பட்டு, இந்த படங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கான காரணம், இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
அதாவது, ஆஸ்கர் விருது படங்களை வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் பார்க்கின்றனர். அந்த வகையில், இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருது போட்டிக்கு அனுப்பப்படும் படங்கள், அரசுக்கு எதிரான கருத்துகளை நிச்சயம் கொண்டிருக்க கூடாது. அப்படி இருக்கும் படங்களை தேர்வுக்குழு புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் முக்கிய கட்டளையாக இருந்திருக்கிறது.
அதனால்தான் அரசுக்கு எதிரான போராட்டத்தை மையப்படுத்தி விடுதலை, சாதிய கொடுமைகளை பேசும் மாமன்னன் படமும், உடனடியாக ஆஸ்கர் விருது போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மிக நல்ல படங்களாக ரசிகர்களால் வரவேற்கப்பட்ட இத்தகைய நல்ல படங்கள், அரசின் கொள்கையால், மறுக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு கவலையளிக்கிறது.





