ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள புஷ்பா 2 படம் நாளை மறுதினம் ( 5ம் தேதி) உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் முதல் பாகம் புஷ்பா தி ரைஸ், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. பிளாக் பஸ்டர் மூவியாக ரசிகர்கள் கொண்டாடினர். இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகர் தேசிய விருதும் கிடைத்தது.
செம்மரக் கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஸ்ரீ வள்ளி கேரக்டரில் ராஷ்மிகா மந்தனா, போலீஸ் எஸ்பியாக பகத் பாசில், வில்லன் கேரக்டரில் சுனில் என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றனர். அதிலும் நடிகை சமந்தா குத்தாட்டம் போட்ட ஊ சொல்றியா மாமா பாட்டு, செம வைரலானது.
இதைத் தொடர்ந்து புஷ்பா படத்தின் 2ம் பாகம் வருகிற 5ம் தேதி. உலகம் முழுவதும் மொத்தம் 12 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகிறது. தமிழ்நாட்டில் 800 திரைகளில் இந்த படம் வெளியிடப்படுகிறது. இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிக எண்ணிக்கையில் ஐமேக்ஸ் தியேட்டர்களில் புஷ்பா 2 வெளியீடு செய்யப்பட உள்ளது.
துவக்கத்தில் படம் ரிலீஸ் என்பதை பண்டிகை நாட்களாக பார்த்து வெளியிட முடிவு செய்வர். ஆனால் இப்போது போட்டிக்கு மற்ற படங்கள் இருக்கிறதா, அதுவும் பெரிய ஸ்டார் நடிகர்களின் பான் இந்தியா படங்கள் எதுவும் அந்த நாளில் வெளியாகிறதா, என்பதை பார்த்துதான் படத்தை வெளியிட வேண்டியுள்ளது.
இதற்கு காரணம், பெரிய படங்கள் வந்தால் மற்ற படங்களுக்கு போதிய எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்காது, அதே போல் பெரிய படங்களின் வருகையால், அந்த படம் குறித்த ஆராவாரத்தால், பெரிய வெற்றால் சின்ன படங்கள் வந்த சுவடே தெரியாமல் காணாமல் போய்விடும். அப்படி பல நல்ல படங்கள் ரசிகர்கள் பார்க்காமல் தோல்வியடைந்துள்ளன.
அதனால் புஷ்பா 2 வருகிற டிசம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளதால் இந்த வாரத்தில் வெளியாக வேண்டிய தம்பி ராமையா, சமுத்திரக்கனி நடித்த ராஜாகிளி, பிளாக் அண்ட் பிளாக், பேமிலி படம், ஆலம்பனா, மிஸ் யூ உள்ளிட்ட படங்கள் ஓரிரு வாரங்கள் தள்ளி ரிலீஸாகின்றன. அதே நேரத்தில் விடுதலை 2, திரு மாணிக்கம் ஆகிய படங்கள் வரும் 20ம் தேதி ரிலீஸாகின்றன. சில படங்கள் பொங்கலுக்கு தள்ளிப் போகவும் புஷ்பா 2 ரிலீஸ் காரணமாக சொல்லப்படுகிறது.





