நயன்தாரா என்றாலே அந்த இடத்தில் சர்ச்சையும் கிளம்பி வந்துவிடும் போல இருக்கிறது. இப்போது விக்னேஷ் சிவன் இயக்கும் ஒரு புதிய படத்தின் பெயர்தான் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இப்படி ஒரு பெயர் வைப்பது, சர்ச்சையை கிளப்பி அதன்மூலமே படத்துக்கு ஒரு விளம்பரம் தேடிக்கொள்ளும் யுக்தியோ என எண்ணத் தோன்றுகிறது.
நானும் ரவுடிதான், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இந்த படங்களில் நயன்தாரா தான் நாயகியாக நடித்திருந்தார். கடந்த ஆண்டு அஜீத் குமார் படத்தை இயக்கும் வாய்ப்பு கைநழுவி போன நிலையில், 2 ஆண்டுகளாக பட வாய்ப்புகளின்றி சில படங்களுக்கு பாடல்களை எழுதிக் கொண்டு இருந்தார் விக்னேஷ் சிவன்.
இதற்கிடையே லவ்டுடே பிரதீப் ரங்கநாதனை வைத்து, ஒரு படம் எடுக்க விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு வந்தது. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் அந்த படத்தை தயாரிக்கவும் முன்வந்தது. ஆனால், படத்தின் பட்ஜெட் 70 கோடி ரூபாய், இதில் டைரக்டர் சம்பளம் ரூ. 10 கோடி, ஹீரோ சம்பளம் ரூ. 20 கோடி என்று கூறியதால், ராஜ்கமல் படத்தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டது.
இதையடுத்து, லியோ படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பாளர் லலித்குமார் இந்த படத்தை தயாரிக்க முன்வந்தார். இதையடுத்து படப்பிடிப்புக்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதில் முக்கிய தகவலாக, தனது கணவர் இயக்கத்தில் மீண்டும் நயன்தாராவும் நடிக்கிறார்.
பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் நயன்தாரா, அவரது அக்காவாக தான் நடிக்கிறார், பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை ஒருவருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த படத்தில் மற்றொரு முக்கிய தகவலாக, மிஷ்கின் மற்றும் எஸ்ஜே சூர்யாவும் , யோகிபாபுவும் நடிக்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
விக்னேஷ் சிவன், இந்த படத்துக்கு எல்ஐசி, அதாவது லைப் இன்சூரன்ஸ் கார்பரேசன் என அழைக்கப்படும் குறயீட்டு ஆங்கில எழுத்துகளை வைத்துள்ளார். ஆனால், எல்ஐசி என்றால், அந்த அர்த்தம் அல்ல. லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்பதுதான் படத்தின் தலைப்பாம். ஆக, பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி பெயரை டைட்டிலாக வைத்திருப்பது வரும் நாட்களில் விமர்சனங்களை, சர்ச்சைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. நயன்தாரா நடிக்கிறாரே, இந்த படத்தை பற்றி சர்ச்சை எழாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.





