தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு இயல் இசை நாடகம் மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப்பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் பாரதியார், எம்எஸ் சுப்புலட்சுமி பால சரஸ்வதி ஆகியோரது பெயர்களில் அகில இந்திய விருதுகளும் வழங்கப்படுகின்றன. தற்போது 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான கலை மாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களை தேர்வு செய்து தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் கலைமாமணி விருது என்பது நாட்டியம் இசை நாடகம் திரைப்படம் என பல்வேறு கலைத்துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் மாநிலத்தின் உயரிய விருதுகளில் ஒன்றாகும். கடந்த 1968ம் ஆண்டு முதல் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கலைஞர்களின் வாழ்க்கையில் பெருமைமிகு அடையாளமாக கலைமாமணி விருது இருந்து வருகிறது.
கடந்த 2021 முதல் 2013ம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது பெரும் திரைத்துறை பிரபலங்கள் விவரம் வருமாறு, கடந்த 2021ம் ஆண்டு திரைத்துறை சார்பில் நடிகர் எஸ்ஜே சூர்யா நடிகை சாய்பல்லவி இயக்குனர் லிங்குசாமி பைட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் சின்னத்திரை நடிகர் கமலேஷ் ஆகியோர் கலைமாமணி விருது பெற உள்ளனர்.
கடந்த 2022 ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பட்டியலில் நடிகர் விக்ரம் பிரபு, நடிகை ஜெயா, விசி குகநாதன் பாடலாசிரியர் விவேகா சின்னத்திரை நடிகை மெட்டி ஒலி காயத்ரி ஆகியோர் கலைமாமணி விருது பெறுகின்றனர். கடந்த 2023ம் ஆண்டு கலைமாமணி விருது பெறுவோர் தேர்வில் நடிகர்கள் மணிகண்டன் ஜார்ஜ் மரியான் இசையமைப்பாளர் அனிருத் பாடகி ஸ்வேதா மோகன் டான்ஸ் மாஸ்டர் சாண்டி ஆகியோர் கலைமாமணி விருதுகள் பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சின்னத்திரை மட்டுமின்றி நாட்டுப்புற கலைஞர்கள் பாடகர்கள் எழுத்தாளர்கள் சிற்பிகள் போன்றவர்களுக்கும் கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 30 பேர் என மூன்று ஆண்டுகளுக்கு மொத்தம் 90 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களை தவிர எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் வழங்கப்படும் சிறப்பு விருது பாடகர் கே ஜே ஜேசுதாஸூக்கு வழங்கப்பட உள்ளது.
அடுத்த மாதம் சென்னையில் நடக்கும் கலைமாமணி விருதுகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று விருதுக்கு தேர்வான கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்க உள்ளார். கலைமாமணி விருது பெறுபவர்களுக்கு 3 சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருது பட்டயம் ஆகியவை வழங்கப்பட உள்ளது. கலைமாமணி விருதுக்கு தேர்வான கலைஞர்களுக்கு சினிமா ரசிகர்களும் சக கலைஞர்களும் வாழ்த்துகளை பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.





