தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பெரிய நடிகர்கள் நடித்த புதிய படங்கள் வெளியாகும் போது சிறப்பு காட்சிகள் திரையிட்டுக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. பெரும்பாலும் அது ரசிகர்களுக்கான சிறப்பு காட்சியாக இருக்கின்றன. அல்லது பிரிமியர் ஷோவாக அதிக டிக்கெட் கட்டணத்தில் அந்த காட்சி திரையிடப்படுகிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதிக்கப்பட்டு அதிகாலை 4 மணி, காலை 7 மணி என சிறப்பு காட்சிகள் அனுமதிக்கப்பட்டது. ஆனால் அஜீத்குமார் நடித்த துணிவு படம் கடந்தாண்டில் வெளியான போது, அதிகாலை 4 மணி காட்சிக்கு தியேட்டர் முன் லாரி மீது ஏறி நின்று ஆடிய ஒரு ரசிகர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
அந்த சம்பவத்துக்கு பிறகு ரஜினி, கமல், விஜய் என யார் நடித்த படமாக இருந்தாலும் காலை 9 மணிக்குதான் சிறப்பு காட்சி அனுமதிக்கப்பட்டு வருகிறது. இது தமிழக அரசின் கண்டிப்பான ஒரு நடவடிக்கையாக தொடர்கிறது. இதை சமூக ஆர்வலர்களும் வரவேற்கவே செய்கின்றனர். லியோ, கங்குவா போன்ற படங்களுக்கு தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்தும், தமிழக அரசு அதை நிராகரித்தது.
இந்நிலையில் நேற்று புஷ்பா 2 படம் உலகம் முழுவதும் வெளியானது. அதற்கு ஒருநாள் முன்பாக 4ம் தேதி, ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் பிரிமியர் ஷோ திரையிடப்பட்டது. இந்த காட்சியில் நடிகர் அல்லு அர்ஜூனும் கலந்துக்கொண்டு ரசிகர்களுடன் படம் பார்க்க வந்திருந்தார். அப்போது ரசிகர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு நெரிசல் ஏற்பட்டது.
நெரிசலை கட்டுப்படுத்தவும், கூட்டத்தை தடுக்கவும் போலீசார் தடியடி நடத்தினர். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 39 வயது பெண் உயிரிழந்தார். அவரது குழந்தையும் இதில் பலத்த காயமடைந்தது. இந்த சம்பவம் பெரிய பரபரப்பை, ஐதராபாத்தில் ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அல்லு அர்ஜூன் அங்கு வந்ததால்தான் நெரிசல் அதிகரித்து, உயிர்பலி நேர்ந்துவிட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து அந்த தியேட்டர் நிர்வாகம் மீதும், நடிகர் அல்லு அர்ஜூன் மீதும் ஐதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தெலங்கானா அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இனிமேல் புதிய படங்களுக்கு சிறப்பு காட்சிகள் அனுமதி இல்லை என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தை போலவே, இனி தெலங்கானாவிலும் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.





