நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் கடந்த 9ம் தேதி பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் சென்சார் விவகாரத்தில் சிக்கிய ஜனநாயகன் படம் குறிப்பிட்ட தேதியில் திரைக்கு வரவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர்.
அதே நேரத்தில் பொங்கலுக்கு ரிலீஸான பராசக்தி வா வாத்தியார் படங்களும் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. நடிகர் ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் படம் மட்டுமே ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு படமாக இருந்தது. இந்த பொங்கலை பொருத்த வரை ரசிகர்களுக்கு சந்தோஷமான ஒரு படமாக ஜீவா நடித்த படம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் ஜனநாயகன் படத்தை பொங்கல் பண்டிகையில் கொண்டாட தளபதி ரசிகர்கள் ஆர்வமாக இருந்த நிலையில் அந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாகாமல் போனது மிகப்பெரிய ஏமாற்றத்தை பலத்த அதிர்ச்சியை ரசிகர்களுக்கு தந்துள்ளது. ஆனால் இன்னும் ரிலீஸ் தேதி முடிவாகவில்லை.
ஜனநாயகன் படம் ரிலீஸ் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இப்போது வழக்கு நடந்து வருகிறது. கடந்த 9ம் தேதி நடந்த வழக்கு விசாரணையில் தனிநீதிபதி பிடி ஆஷா அளித்த தீர்ப்பை, மேல் முறையீட்டில் நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் பட நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கிலும் படத்தின் ரிலீஸ் குறித்த சாதகமாக பதில் கிடைக்கவில்லை.
இந்த வழக்கு கடந்த 20ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்ட நிலையில் வழக்கின் இறுதி தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்த சூழலில் தற்போது வருகிற 27ம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ் குறித்த இறுதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
வருகிற 27ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடக்கும் ஜனநாயகன் ரிலீஸ் குறித்த வழக்கில் சாதகமான பதில் கிடைக்கும் பட்சத்தில் ஜனநாயகன் படம் ஜனவரி 29ம் தேதி ரிலீஸ் செய்யப்படலாம். அல்லது பிப்ரவரி மாதத்துக்கு ரிலீஸ் தள்ளிப் போகலாம். ஒருவேளை படத்தை மறு ஆய்வுக்குழு தணிக்கை செய்ய 4 வாரங்கள் வரை நீதிபதிகள் அமர்வு அவகாசம் தரும் பட்சத்தில் இன்னும் ஓரிரு மாதங்கள் கூட ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.





