தமிழ் சினிமாவில் நடப்பு ஆண்டில் இதுவரை 250க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன. இதில் 50க்கும் குறைவான படங்களே மக்களின் கவனம் பெற்ற படங்களாக இருந்திருக்கின்றன. இதில் பெரிய அளவில் வசூல் ரீதியாக, விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற படங்கள் என்றால் 20 எண்ணிக்கை கூட தாண்டவில்லை.
அதிலும் ரஜினி நடித்த லால் சலாம் வேட்டையன் கமல் நடித்த இந்தியன் 2 விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் தனுஷ் நடித்த ராயன் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 அருள்நிதி நடித்த டிமாண்டி காலனி தமிழரசன் பச்சமுத்து இயக்கிய லப்பர் பந்து சூர்யா நடித்த கங்குவா போன்ற குறிப்பிட்ட படங்களே பெரிய அளவில் கவனம் பெற்றன.
எனினும் குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன. அதே நேரத்தில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த வகையில் கங்குவா இந்தியன் 2 படங்கள் இருந்தாலும் விமர்சன ரீதியாக இந்த படங்கள் படுமோசமான தோல்வி படங்களாகவும் இருந்து விட்டன என்பதும் கவனிக்கத்தக்கது.
அதே நேரத்தில் இந்த ஆண்டில் நடிகர் அஜீத்குமார் நடித்த எந்த படமும் வெளிவரவில்லை. அவரது நடிப்பில் கடந்தாண்டில் ஜனவரி மாதம் வெளியான துணிவு படத்துக்கு பிறகு, வரும் 2025ம் ஆண்டில்தான் விடாமுயற்சி படம் பொங்கலுக்கும், குட்பேட் அக்லி படம் மே 1ம் தேதி அஜீத்குமார் பிறந்த நாளிலும் வர உள்ளது. இது உழைப்பாளர் தினம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வகையில், 2024ம் ஆண்டில் வெளியான படங்களில் தமிழ்நாட்டில் வசூல் ரீதியாக டாப் 10 படங்கள் வரிசையில் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் விஜய் நடித்த கோட் படம் 210 கோடி ரூபாய் வசூலித்து முதலிடத்தில் உள்ளது. அடுத்து சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் 160 கோடி ரூபாய் வசூலித்து 2ம் இடத்தில் உள்ளது. 3வது இடத்தில் ரஜினி நடித்த வேட்டையன் படம் 110 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அடுத்து 82 கோடி வசூலித்து ராயன் படம் 4வது இடமும், புஷ்பா 2 படம் 75 கோடி வசூலித்து 5வது இடத்திலும் உள்ளது.
இதையடுத்து அரண்மனை 4 படம் 70 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மஞ்சும்மெல் பாய்ஸ் 63 கோடி ரூபாய், அயலான் படம் 58 கோடி ரூபாய், இந்தியன் 2 படம் 50 கோடி ரூபாய், மகாராஜா படம் 46 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதுவே 2024ம் ஆண்டில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படங்கள். இந்த டாப் 10 பட்டியலில் தெலுங்கு படமான புஷ்பா 2, மலையாள படமான மஞ்சும்மெல் பாய்ஸ் ஆகிய படங்களும் இடம்பிடித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.





