விஜய் சேதுபதிக்கு கடந்த ஆண்டு வெளியான மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த திரைப்படம் விஜய் சேதுபதிக்கும் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனுக்கும் திருப்புமுனையாக அமைந்தது.
மகாராஜா திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு தமிழ் சினிமாவில் மார்க்கெட் எகிறிது. பலரும் அவரது அடுத்த திரைப்படத்தை எதிர்பார்த்திருந்த வேளையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏஸ் திரைப்படம் வெளியானது. ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தை இயக்கிய ஆறுமுக குமார் இதனை எடுத்திருந்தார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. படத்திற்கு எந்த ஒரு ப்ரோமோஷன் பணிகளும் நடைபெறாத சூழலில், வசூலிலும் படு பாதாளத்தில் விழுந்தது. இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்த அடுத்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்திருக்க, திரையரங்குகளில் வெளியானது தலைவன் தலைவி திரைப்படம்.
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பிறகு, இதனை இயக்கி இருக்கிறார் பாண்டிராஜ். படத்தில் நித்யா மேனன், யோகி பாபு உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையில் இதன் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்தன. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.
படத்தின் முதல் பாதி நன்றாக இருப்பதாகவும் இரண்டாம் பாதி சரி இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். முதல் பாதியில், அனைத்து விஷயங்களுமே சரியாக இருந்ததாகவும், விறுவிறுப்பாக நகைச்சுவையுடன் கதை நகர்ந்ததாகவும் சினிமா விமர்சகர்கள் கூறியுள்ளனர். அதேசமயம் இரண்டாம் பாதியில் சொல்ல வந்த விஷயத்தையே திரும்பத் திரும்ப சொல்வதாகவும், இதனால் ஒரு கட்டத்தில் சலிப்பை தட்டிகிறது என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
இருப்பினும் இந்த திரைப்படம் வசூலில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றுதான் கூற வேண்டும். குடும்ப கதையாக இது இருக்கிறது என்று கூறியிருப்பதால் பலரும் திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் இந்த திரைப்படத்திற்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வசூலும் கூடியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் இந்த திரைப்படம் 20 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





