நடிகர் விஜய் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தை தொடர்ந்து அடுத்த படத்தில் நடிக்க தயாராகி விட்டார். நேற்று படத்தின் பூஜை நடந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், எச் வினோத் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். பட்டு வேட்டி சட்டையில் விஜயின் அசத்தலான கெட்டப் நேறறு சமூக வலைதளங்களில் வைரலானது.
தளபதி 69 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு விரைவில் டைட்டில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. தலைவன் இருக்கிறான், அல்லது நாளைய தீர்ப்பு என பெயர் வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த தலைப்புகளை தவிர்த்து புதிதாக வைத்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை, வரவேற்பை பெற்றிருந்தாலும் அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. ஏனெனில் ஒரு நல்ல நடிகர், ரசிகர்களை உற்சாகப்படுத்துகிற முக்கியமான ஒரு நடிகரான விஜய், சினிமாவை விட்டு விலகுவதை பெரிய இழப்பாக தான் பார்க்கின்றனர்.
அதே போல் தமிழ் சினிமா துறைக்கும் வர்த்தக ரீதியாக விஜயின் இந்த முடிவு பலத்த அதிருப்தியை தந்துள்ளது. ஏனெனில் ஆண்டுக்கு ஒரு படம் என்றால் கூட 500 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடக்கும், பல நூறு தொழிலாளர்களுக்கு விஜய் படத்தில் நடிக்கும் பணிபுரியும் வாய்ப்பும் பறிபோகிறது. எனினும் விஜய் சினிமாவை விட்டு விலகுவது அவரது சொந்த உரிமையாக, விருப்பமாக இருப்பதை யாரும் வற்புறுத்த முடியாது.
இந்நிலையில் தளபதி 69 படத்தில் நடிகர்கள் பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நரேன், கௌதம் வாசுதேவ் மேனன், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்டோர் நடிப்பதை படத்தை தயாரிக்கும் கேவிஎன் புரடக்சன்ஸ் அறிவிப்பு போஸ்டர்களை வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளது.
அதன் தொடர்ச்சியாக தளபதி 69 படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து தகவலை இப்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்தில் இசையமைப்பாளராக அனிருத், ஒளிப்பதிவாளராக சத்யம் குரியன், ஸ்டண்ட் மாஸ்டராக அனல் அரசு, கலை இயக்குனராக செல்வக்குமார், எடிட்டராக பிரதீப் ராகவ், காஸ்ட்யூம் டிசைனராக பல்லவி, பப்ளிசிட்டி டிசைனராக கோபி பிரசன்னா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்று பையனூரில் பாடல் காட்சியுடன் தளபதி 69 படப்பிடிப்பு துவங்குகிறது.





