விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். அவர்கள் மாநாட்டின் போது குடிநீர் இன்றியும் உணவின்றியும் தவித்தனர்.
மாநாட்டிற்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் மாநாடு கூட்டத்தில் இது பற்றி விஜய் வாய் திறக்காமல் இருந்ததும், மேடையிலேயே ஒரு இரங்கல் கூட பேசாமல் தவிர்த்ததும் தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேடையில் பேசிய விஜய், பிளவுவாத கொள்கையையும், மத அரசியலையும் எதிர்ப்பதாக தெரிவித்தார். திராவிட மாடல் என்று கூறிவிட்டு ஒரு குடும்பம் இங்கு கொள்ளை அடிப்பதாக திமுகவை மறைமுகமாக சாடினார். அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் பாயாசமா என்றும் கேள்வி எழுப்பினார்.
மிக முக்கியமாக கூட்டணியில் வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்பதையும் விஜய் குறிப்பிட்டார். அதோடு கூத்தாடிகள் என்றால் கேவலமா என்றும் கேள்வி எழுப்பினார். விஜய்யின் இந்த பேச்சு இணையத்தில் வைரலானது. ஒரு பக்கம் இதற்கு ஆதரவு இருந்தாலும் மறுபக்கம் அவர் பேசியது சினிமா தனமாக இருந்ததாக பலரும் கூறி வந்தனர்.
இந்த நிலையில், மாநாட்டை வெற்றிகரமாக முடித்திருக்கும் விஜய் அடுத்ததாக வினோத் படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார். அவரின் 69 ஆவது திரைப்படமாக உருவாகும் இதில் விஜய் 275 கோடி ரூபாய் சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் ஏற்கனவே ஒரு பாடல் படமாக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் இதற்கு அடுத்த கட்ட படப்பிடிப்பை நவம்பர் நான்காம் தேதி தொடங்க இருக்கிறார் வினோத். சென்னையில் நடைபெறும் இதன் சூட்டிங்கில் விஜய் கலந்து கொள்கிறார். ஜனவரி மாதத்துடன் இந்த படத்தை முடித்துவிட்டு, தீவிர அரசியலில் அவர் இறங்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





