தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி டாப் ஸ்டார் நடிகராக இருந்தவர் பிரசாந்த். நடிகர் தியாகராஜனின் மகன் இவர். தியாகராஜனும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல படங்களில் 1980களில் நடித்தவர். குறிப்பாக அவர் நடித்த மலையூர் மம்பட்டியான் கொம்பேறி மூக்கன் தீச்சட்டி கோவிந்தன் நீங்கள் கேட்டவை உள்ளிட்டவை பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்களாக இருந்தன.
அதன்பிறகு தியாகராஜன் மகன் பிரசாந்தும் சினிமாவில் அறிமுகமானார். வைகாசி பொறந்தாச்சு என்ற படம் மூலம் அறிமுகமான நடிகர் பிரசாந்துக்கு முதல் படமே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தேனிசை தென்றல் தேவா இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மாஸ் ஹிட் பாடல்கள் அமைந்தன.
தொடர்ந்து பிரசாந்த் நடித்த வண்ண வண்ண பூக்கள், திருடா திருடா, ஜீன்ஸ், பார்த்தேன் ரசித்தேன், ராசா மகன், செந்தமிழ் செல்வன், அப்பு, கண்ணெதிரே தோன்றினாள், ஆணழகன் என பல வெற்றி படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் நடிகர் பிரசாந்த் கிரஹலட்சுமி என்பவரை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார்.
ஆனால் திருமணம் ஆன சில மாதங்களிலேயே கிரஹலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது தெரிய வந்த நிலையில், அவர் தன் மனைவியை பிரிந்தார். கோர்ட்டில் விவாகரத்து பெற்றார். குடும்ப வாழ்வில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக சினிமாவில் மார்க்கெட் இழந்த பிரசாந்த், பிறகு நடிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டார்.
இந்நிலையில் மீண்டும் இப்போது சினிமாவில் 2வது சுற்றை ஆரம்பித்துள்ள நடிகர் பிரசாந்த், விஜயுடன் தி கோட் படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவரது நடிப்பு அதிக வரவேற்பு பெற்றது. அதேபோல் அவரது அப்பா தியாகராஜன் தயாரித்து, டைரக்ட் செய்த படம் அந்தகன். இதில் கண் பார்வை அற்றவராக பிரசாந்த் நடித்திருந்தார். சிம்ரன் வில்லி கேரக்டரில் நடித்திருந்தார். பிரியா ஆனந்த் யோகி பாபு சமுத்திரகனி கார்த்திக் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இந்த படம் தியேட்டர்களில் பெரிய அளவில் ரசிகர் வரவேற்புடன் ஓடியது குறிப்பிடத்தக்கது.
அந்தகன் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் நாளுக்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர். இந்தியில் வெளியான அந்தாதூன் படத்தைதான் தியாகராஜன் தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார். கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி திரைக்கு வந்த இந்த படம், வருகிற 30ம் தேதி அதாவது தீபாவளிக்கு முந்தைய நாள் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது. அதே நாளில் ஆஸ்ட்ரோ வின்மீன் என்ற வெளிநாட்டு சேனலிலும் அந்தகன் படம் ஒளிபரப்பாக உள்ளது. ஏற்கனவே தீபாவளிக்கு லப்பர் பந்து, தங்கலான் படங்கள் ஓடிடியில் வெளியாகும் நிலையில் அந்த பட்டியலில் அந்தகன் படமும் சேர்ந்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.





