நடிகர் விஜய் தற்போது முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். கடந்த பிப்ரவரி மாதம் கட்சியை தொடங்கிய அவர், முழு வீச்சில் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவதே தனது இலக்கு எனக் கூறிக்கொண்டு அவர் ஓடிக் கொண்டிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் அரசியலில் இப்போதே பல்வேறு விமர்சனங்களுக்கும் விஜய் ஆளாகி இருக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமான அரசியல் கூட்டத்தை அவர் நடத்தினார். விஜயின் முதல் அரசியல் மாநாடாக அது அமைந்தது. இந்த மாநாட்டை பார்ப்பதற்காக வந்தவர்களில் ஐந்து பேர் வெவ்வேறு இடங்களில் விபத்தில் சிக்கி உயிர் இழந்தனர்.
ஆனால் மாநாட்டு மேடையில் அவர்களுக்கு ஒரு இரங்கல் கூட விஜய் தெரிவிக்கவில்லை என பலர் ஆதங்கப்பட்டனர். இது மட்டுமல்லாமல், பெஞ்சல் புயல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று நிவாரணம் வழங்காமல், பனையூரில் உள்ள தனது அலுவலகத்திற்கு அழைத்து உதவி செய்தார் விஜய். களத்திற்கு செல்ல தயங்கும் அரசியல்வாதியாக இவர் இருக்கிறாரே என்று அவர் மீது பலரும் விமர்சனம் வைத்தனர்.
இது ஒரு பக்கம் இருக்க, பல்வேறு அரசியல் சர்ச்சைகளுக்கும் விஜய் சொந்தக்காரர் ஆகி வருகிறார். தன்னுடன் கூட்டணியில் வருபவர்களுக்கு ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று கூறி ட்விஸ்ட் வைத்தார். இப்படி தனது கட்சியை பலப்படுத்தி வரும் விஜய், இறுதியாக ஹெச் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
விஜய்யின் 69 ஆவது திரைப்படமாக உருவாகும் இதில், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, நரேன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். அக்டோபர் மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தத் திரைப்படம் அரசியல் கலந்த, ஆக்சன் படமாக உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முழுக்க முழுக்க சென்னையை அடுத்த பையனூரிலேயே இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தற்போது ஒரு கட்ட படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள். அடுத்ததாக, ஜனவரி ஒன்றாம் தேதி மீண்டும் சூட்டிங் ஆரம்பமாகிறதாம். இதுவும் பையனூரிலேயே நடைபெறும் என்றும், அதில் 45 நாட்களில் சூட்டிங் முடிவடையும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன்பிறகு தமிழ்நாடு முழுக்க விஜய் சுற்றுப்பயணம் செய்து தனது கட்சியை வலுப்படுத்துவார் என்று கூறப்படுகிறது.





