நடிகர் ரஜினிகாந்த் போலவே நடிகர் விஜய்க்கும் தமிழ்நாட்டில் ரசிகர்கள் கூட்டம் மிக அதிகம். தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரளம் கர்நாடகா ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் ரஜினிக்கும் விஜய்க்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ரஜினி விஜய் படங்கள் என்றாலே அவர்களுக்கு பண்டிகை கால கொண்டாட்டம்தான்.
நடிகர் விஜய் இப்போது ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி ரிலீஸாகிறது. இதுதான் அவரது கடைசி படம் என்பதும் ஏற்கனவே உறுதியாகி விட்டது. தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சித் தலைவரான அவர் தமிழகத்தின் முதலமைச்சர் ஆவதே என் லட்சியம் என்று கூறி வருகிறார்.
நடிகர் ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து முடித்து விட்டார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. கூலி படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் ரஜினி இப்போது பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
விஜய் நடித்த வாரிசு படம் வெளியான போது, அந்த பட விழாவில் பேசிய நடிகர் சரத்குமார், தமிழ் சினிமாவில் இப்போது வசூல் சக்ரவர்த்தியாக உள்ள விஜய்தான் சூப்பர் ஸ்டார் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். நடிகர் சரத்குமாரின் இந்த பேச்சுக்கு பலரும் ஆதரவு தெரிவிக்க, சூப்பர் ஸ்டாராக ரஜினி இருக்கும்போதே விஜயை சொன்னது ரஜினி ரசிகர்களிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் இணையத்தில் சமூக வலைதளங்களில் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரஜினியும் காக்கா கழுகு கதை சொல்லப் போக மேலும் கொளுத்திப் போட்டது போல் பிரச்னை விஸ்வரூபமாகி விட்டது. பிறகு சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி ஒருவர்தான் என விஜய் லியோ பட விழாவில் கூறிய பிறகுதான் இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன் விஜய் ஜெனிலியா நடித்த சச்சின் படம் வருகிற 18ம் தேதி உலகம் முழுவதும் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. இதே நாளில் நடிகர் ரஜினிகாந்த் மம்முட்டி ஷோபனா நடித்த தளபதி படமும் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. தளபதி விஜய், ரஜினி நடித்த தளபதி என இரண்டு தளபதிகளும் ஒரே நாளில் திரைக்கு வந்தால் ரஜினி, விஜய் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா, வேண்டும் என்றே இப்படி ஒரு அலப்பரையை கிளப்பி விடுகிறார்களா என்ற சர்ச்சை கோலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளது.





