தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால், கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்த 10க்கும் மேற்பட்ட படங்கள் சரியாக போகவில்லை. ஆனால் கடந்தாண்டில் வெளியான ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ட் செய்த மார்க் ஆண்டனி படம் விஷாலுக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்தது.
ஆனால் அதன்பிறகு இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி ஷங்கர் நடித்த ரத்னம் படம் பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது. மிஷ்கின் இயக்கத்தில் பெரிய வெற்றியை பெற்ற துப்பறிவாளன் படத்தை 2ம் பாகமாக இயக்கி அவரே நடிக்க, நடிகர் விஷால் முயற்சித்தார். ஆனால் அந்த படத்தை தயாரிக்க யாரும் முன்வரவில்லை.
இந்நிலையில் இன்று விஷாலுக்கு பிறந்த நாள். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் காலை உணவை விஷால் வழங்கினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால் கூறுகையில், என்னுடைய பிறந்த நாளை எப்போதும் இந்த இடத்துக்கு வந்துதான் துவங்குவேன். இவர்களை சந்திப்பது மிகப்பெரிய பாக்கியம். அவர்களது ஆசிர்வாதமும் பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.
சினிமாவில் 20 சதவீதம் பேருக்குதான் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மற்றவர்கள் வாய்ப்பு கிடைக்காமல் நிறைய ஏமாற்றம் அடைகின்றனர். எந்த கம்பெனிக்கு செல்கிறோம், அவர்கள் சொல்வது உண்மையா, உண்மையில் அவர்கள் படம் எடுக்கிறார்களா என்பதை முதலில் தெளிவாக தெரிந்துக்கொள்வது முக்கியம்.
நடிப்பு வாய்ப்புக்காக எவனாவது தவறாக நடந்துக்கொள்ள முயற்சி செய்தால், அதை தைரியமாக பெண்கள் எதிர்கொண்டு, அப்படி கேட்கிறவர்களை செருப்பால் அடிக்க வேண்டும். அட்ஜஸ்ட்மென்ட் கேட்டால் செருப்பால் அடிக்கும் துணிச்சல் பெண்களுக்கு வர வேண்டும். யாராக இருந்தாலும் பெண்களை இப்படி பயன்படுத்த நினைப்பவர்களுக்கு தண்டனை கிடைத்தாக வேண்டும்.
தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் இல்லை என்று கூற முடியாது. காலம் காலமாக இந்த புகார்கள் உள்ளன. இங்கும் அதுபோல் பிரச்னைகள் இருக்கலாம். நடிகைகள் தங்களிடம் யாராவது தவறாக நடந்துக்கொண்டதாக புகார் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். கேரளாவில் ஹேமா கமிஷன் போலவே, தமிழ் திரைப்பட சங்கம் சார்பில் அதுபோன்ற ஒரு கமிட்டி அமைக்கப்படும். அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று, நடிகர் விஷால் உறுதியாக கூறியிருக்கிறார்.





