லலித்குமார் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படம் கடந்த 19ம் தேதி ரிலீஸ் ஆனது. படம் குறித்த விமர்சனம் சூப்பர், சுமார், சொதப்பல், செகண்ட் ஆப் வேஸ்ட் என்று பல விதமாக இருந்தாலும், இதுவரை 500 கோடி ரூபாய் வசூலை கடந்து, தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக லியோ அமைந்துவிட்டது.
லியோ வெளியீட்டுக்கு முன்பு, செப்டம்பர் 30ம் தேதி, லியோ இசை வெளியீட்டு விழா நடப்பதாக இருந்த நிலையில், போலீசார் அனுமதி மறுத்ததால், அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இப்போது, அதே இடத்தில் வரும் நவம்பர் 1ம் தேதி, லியோ வெற்றிவிழா நடத்தப்படுகிறது. இதற்கு போலீஸ் அனுமதியும் இன்று சில கண்டிசன்களுடன் கிடைத்திருக்கிறது.
ஆனால், லியோ படம் ரிலீஸ் செய்து, தியேட்டர்களில் திரையிட்டதில் மிகப்பெரிய விவகாரம் வெடித்திருக்கிறது. அதாவது, புதிய படம் ரிலீஸ் என்றால், 60க்கு 40 என்ற விகிதத்தில் தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர் அல்லது விநியோகஸ்தர்களுக்கு வசூலில் பங்கு தருவது வழக்கம். அல்லது 50க்கு 50 என்ற விகிதத்திலும் வசூலை பிரித்துக்கொள்வதும் வழக்கம்.
ஆனால் இந்த முறை லியோ படம் திரையிட்ட தியேட்டர்களில் டிக்கெட் வசூலில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் தரப்புக்கு 75 முதல் 80 சதவீதம் எனவும், தியேட்டர் உரிமையாளர்களுக்கு 20 சதவீதம் எனவும் வசூலில் பங்கு பிரித்து தர வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் தான் லியோ படம், தியேட்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தியேட்டர் உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும். 190 ரூபாய்க்கு விற்கும் டிக்கெட்டில் அரசு வரியாக 52 ரூபாய் போக, மீதமுள்ள 138 ரூபாய், 103 ரூபாய் தயாரிப்பாளர் அல்லது விநியோகஸ்தர்களுக்கும், 35 ரூபாய் மட்டுமே தியேட்டர் உரிமையாளர்களுக்கும் என்பது மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கிறது.
இதையடுத்து, இனிமேல் தங்களது தியேட்டர்களில் ரசிகர் சிறப்பு காட்சி திரையிடுவதில்லை. அதே போல், அரசு தரப்பில் நிர்ணயிக்கும் காட்சிகள் மட்டுமே திரையிடப்படும். குறிப்பாக, அரசு நிர்ணயிக்கும் விலையில் மட்டுமே இனி, ரசிகர்களுக்கு டிக்கெட் விற்கப்படும். இதுவரை இந்த விஷயங்களில் விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் லாபமடையும் நிலையில் அவர்களுக்கு சாதகமாக நடந்துக்கொண்ட தியேட்டர் உரிமையாளர்கள், இனிமேல் ரசிகர்கள் பக்கம் ஆதரவாக நிற்க முடிவெடுத்திருப்பதால் ரசிகர்கள் நன்றி சொல்ல காத்திருக்கின்றனர்.





