அரசியல் களத்திலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நடிகர் கமல்ஹாசன் மீது நிறைய விமர்சனங்களும் சர்ச்சைகளும் இருந்தாலும் ஒரு திரைப்பட கலைஞனாக அவரது சாதனைகளும் வெற்றிகளும் யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாதவை. தமிழ் சினிமா இன்று உலக சினிமா அளவுக்கு முன்னேற நடிகர் கமல்ஹாசன் போன்ற கலைஞானிகளே முக்கிய காரணம்.
நடிகராக மட்டுமின்றி இயக்குனராக தயாரிப்பாளராக கதை வசனகர்த்தாவாக பாடகராக பாடல் ஆசிரியராக தொழில்நுட்ப கலைஞராக நடனக்கலைஞராக டப்பிங் கலைஞராக கமல்ஹாசனின் உச்சங்கள் யாரும் நெருங்க முடியாத அபாரமான சாதனைகளாகும். தமிழ் சினிமாவில் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியவரே நடிகர் கமல்ஹாசன்தான்.
குறிப்பாக அந்த காலத்திலேயே சினிமாவில் பல புதிய முயற்சிகளை கொண்டு வந்து ஜெயித்தவர் கமல்ஹாசன். குருதிப்புனல் மகாநதி குணா இந்தியன் அவ்வை சண்முகி அபூர்வ சகோதரர்கள் மூன்றாம் பிறை தசாவதாரம் என அவரது படங்கள் எல்லாம் சாதாரண படங்கள் இல்லை. இன்னும் 100 ஆண்டுகள் கழிந்தாலும் இந்த படங்கள் தமிழ் சினிமாவின் அடையாளங்களாக பேசப்படும்.
நடிகர் கமல்ஹாசனை போலவே நடிகர் அஜீத்குமாரும் ஒரு காலகட்டத்தில் சில புதிய முயற்சிகளை செய்ய ஆர்வம் காட்டினார். அதில் ஒரு படம்தான் சிட்டிசன். இயக்குனர் சரவண சுப்பையா இயக்கிய இந்த படத்தில் பல மாறுபட்ட தோற்றங்களில் அஜீத்குமார் நடித்திருப்பார். பல காட்சிகளில் அது அஜீத்குமார் தானா என்பதே சந்தேகமாக இருக்கும்.
சிட்டிசன் படம் குறித்து சமீபத்தில் பேசிய அந்த படத்தின் இயக்குனர் சரவண சுப்பையா கூறியதாவது, சிட்டிசன் படத்தின் கதையை கமல்ஹாசன் சார்கிட்ட தான் முதலில் சொன்னேன். கதை ரொம்பவும் பிடிச்சிருக்கு. ஆனால் நான் இப்போது ஹேராம் படம் பண்ணிட்டு இருக்கேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று என்கிட்ட சொன்னார்.
அப்புறம் ரொம்பவும் லேட் ஆனதால் அந்த படம் கமல் சார் பண்ண முடியலே. அதற்கு அப்புறம்தான் சிட்டிசன் படத்தில் அஜீத்குமார் நடித்தார். அஜித்குமார் சாருக்கு சிட்டிசன் படத்துல மேக்கப் உதவி பண்ணினது கமல் சார்தான் என்று இயக்குனர் சரவண சுப்பையா கூறியிருக்கிறார். தன்னை மட்டுமின்றி தன்னை போல மாறுபட்ட மேக்கப்பில் நடிக்க விரும்பிய அஜீத்குமாருக்கு கமல் உதவிய தகவல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரிய ஆச்சரியத்தை தந்துள்ளது.





