நடிகர் விஜய் கடந்த 2024ம் ஆண்டில் பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார். பிறகு கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். கொள்கை பாடல் வெளியானது. விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் அடுத்தடுத்து கட்சியின் மாநில மாநாடுகளை பிரமாண்டமாக நடத்தினார். அவருக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னமும் ஒதுக்கியது.
கடந்த சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக கூட்டணி கட்சிகளின் 13 எம்எலஏக்களின் ஆதரவுடன் ஆட்சியும் அமைத்து விட்டார். இந்த சூழலில் தமிழகத்தில் சில இடங்களில் குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளது. குறிப்பாக கோவையில் 10 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது தமிழகத்தில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை கற்பழிப்பு சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. குறிப்பாக போதை கலாசாரம் பெருகி விட்டது என்று திமுக அரசை குற்றம் சாட்டி பேசியிருந்தார்.
இந்நிலையில் அவரது ஆட்சி நடந்து வரும் சூழலில் இப்போது கோவையில் மிக மோசமான இந்த சம்பவம் நடந்துள்ளது. 10 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் அங்குமிங்கும் நடந்த குற்றங்களுக்கு திமுக அரசுதான் காரணம் என்கிற ஒரு பிம்பத்தை உருவாக்கி நாடகமாடியவர் நடிகர் விஜய்.
அவரது ஆட்சியில் இந்த பத்து நாட்களில் வரிசையாக ஏராளமான கொடுங் குற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. அவரை நம்பி கூக்குரலிட்ட அந்த 1.70 கோடி அறிவு குருட்டுக் கூட்டம் இப்போது வாயை மூடிக் கொண்டு இருக்கிறது.
இதற்கெல்லாம் அவரும் அந்த பொறுப்பற்ற கூட்டமும் என்ன பதில் சொல்ல போகின்றன? குற்றம் சாட்டுவது எவ்வளவு எளிது என்று இப்போது புரிகிறதா? என்று ஜேம்ஸ் வசந்தன் அந்த பதிவில் முதல்வர் விஜய் குறித்தும் அவரது ஆட்சி குறித்தும் விமர்சித்து கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





