நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் படம் வருகிற ஜனவரி 9ம் தேதி பொங்கலுக்கு ரிலீஸாகிறது. அதன்பிறகு 5 நாட்கள் கழித்து 14ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படமும் ரிலீஸாக உள்ளது. இதுதான் ஏற்கனவே திட்டவட்டமாக பட நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்ட அதிகாரபூர்வ அறிவிப்பாக இருந்தது.
இந்நிலையில் பராசக்தி படம் வருகிற ஜனவரி 14ம் தேதிக்கு முன்பாக அதாவது ஜனவரி 9 அல்லது ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு தரப்பில் ஏற்பாடுகள் நடந்து வருவதாக ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விஜய் சிவகார்த்திகேயன் படங்கள் பொங்கல் பண்டிகை களத்தில் ஒரே நேரத்தில் மோத இருக்கின்றன.
இதற்கு முக்கிய காரணம் தியேட்டர்கள் போதிய எண்ணிக்கையில் பராசக்தி படத்துக்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக தெலுங்கானா ஆந்திரா மாநிலங்களில் பிரபாஸ் நடித்த தி ராஜா சாப் உள்ளிட்ட சில முக்கிய படங்கள் வெளியாவதால் அந்த மாநிலங்களில் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வெளியாகும் அதே நாளில் தனது பராசக்தி படமும் வெளியாக வேண்டும் என்று படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனே விரும்புவதாகவும் ஒரு அதிரடி தகவல் பரவி வருகிறது. ஏனெனில் விஜய் ஜனநாயகன் படத்துடன் சினிமாவை விட்டு விலகி அரசியலில் முழுநேரமும் ஈடுபட போகிறார்.
ஏற்கனவே தி கோட் படத்தில் நடிகர் விஜய், துப்பாக்கியை பிடிங்க சிவா என்று சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியை தந்ததால் அந்த காட்சி மூலம் விஜயே தனக்கு பிறகு தன்னுடைய இடம் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு தான் என சொல்லாமல் சொல்லிவிட்டதாகவும் இணையத்தில் எப்படியோ தகவல் வைரலாகி விட்டது.
இப்போது விஜய் படமும் தனது படமும் ஒரே நாளில் வெளியாகி ஒருவேளை பராசக்தி படம், விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை விட அதிக வசூலும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பும் பெற்றுவிட்டால் விஜயின் கடைசி படத்தை வசூலில் முந்தியது சிவகார்த்திகேயன்தான் என்ற சினிமா வரலாறும் உருவாகி விடும். அது இன்னும் தன்னை உச்சத்துக்கு கொண்டு செல்லும் என்று சிவகார்த்திகேயன் கருதுவதாகவும் தகவல் பரவி வருகிறது.





