நடிகர் சியான் விக்ரம் நடிப்பில், வரும் ஜனவரி 26ம் தேதி, தங்கலான் படம் ஐந்து மொழிகளில் திரைக்கு வருகிறது. பா. ரஞ்சித் இயக்கிய இந்த படம், பல விருதுகளை வாங்கி குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பின்னணி இசையில், இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமாருக்கு இந்த படம், மிகப்பெரிய வரலாற்று வெற்றியை தரும் என்றும் பேசப்படுகிறது
தங்கலான் படம் டீசர் வெளியீட்டு விழா இன்று காலை நடந்தது. இதில் பங்கேற்ற விக்ரம் பேசியதாவது, வரலாற்றில் நடந்த நல்ல விஷயங்களை இந்த படம் பேசுகிறது. அதேபோல் வரலாற்றில் உள்ள கெட்ட விஷயங்களையும் மறந்துவிடக் கூடாது. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வியலை இந்த படம் பேசுகிறது.
தேள்கள், பாம்புகள் நிறைந்த பகுதியில், தங்கவயல் சுரங்க பகுதிகளில் தான் படப்பிடிப்பு நடந்தது. பகலில் அதிக வெப்பம், இரவில் அதிக குளிர் என சிரமப்பட்டோம். விஷ ஜந்துகள் நிறைந்த பகுதியில் செருப்பு கூட காலில் இல்லாமல், பார்த்து பார்த்து ஜாக்கிரதையாக நடந்தோம். அந்த காலத்தில் மனிதர்கள் அங்கு அப்படிதான் வாழ்ந்திருக்கின்றனர் என்பதை உணர்ந்தோம்.
எனக்கு மேக்கப் போட, தினமும் நான்கைந்து மணி நேரம் வரை ஆகும். லைவ் சவுண்ட் முறையில், படப்பிடிப்பு தளத்தில் வசனங்கள் பேசும்போது அப்படியே உள்வாங்கி நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். குரலில் மாற்றத்தை கொண்டு வரும்போது, முகபாவனைகளை அதற்கேற்ப மாற்ற வேண்டும். இரண்டுமே சரியாக வராத போது, மிகவும் கவனித்து பார்த்து பார்த்து நடிக்க வேண்டும்.
இப்படி ஒரு கேரக்டரில் நடித்த பிறகு, அந்த மாதிரி வாழ்வியலை உணர்ந்த பிறகு கார், விமானத்தில் போகும்போது மிகவும் வித்யாசமாக அந்நியமாக மனதில் தோன்றும். துவக்கத்தில் இந்த படத்தில் பணியாற்றிய போது ஒரு மாதிரியாக இருந்தது. நாளடைவில் அது மிகவும் பிடித்து போய்விட்டது. நான் பிதாமகன், ராவணன், ஐ போன்ற படங்களில் கஷ்டப்பட்டு அந்த கேரக்டர்களை நடித்தேன். ஆனால், தங்கலான் படத்துடன் ஒப்பிடும் போது, அது வெறும் 3 சதவீதம் தான்.
இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகளில் கோவணம் கட்டிய படிதான் நடித்தேன். என்னுடன் நடித்த பலரும், அந்த கெட்டப்புகளில் தான் இருந்தனர். எங்களுக்காக, டைரக்டர் பா. ரஞ்சித்தும் ஷூட்டிங் ஸ்பாட்டில் கோவணம் கட்டிக்கொண்டு தான் இருந்தார், என்று மேடையில் கூறினார் சியான் விக்ரம். படத்தில் நடிப்பவர்கள் தாழ்வு மனப்பான்மையாக, இப்படி எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக, தன்னையும் அவர்களில் ஒருவராக மாற்றிக்கொண்டு ஒரு இயக்குநர் கோவணம் கட்டிக்கொண்டு, ஸ்டார்ட் ஆக்சன் காமரா சொல்வதெல்லாம், வேற லெவல் ப்ரோ.





